பெரம்பூர்: ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60 அடி சாலையில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில் திருடிய வழக்கில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி ஆவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, கெல்லீஸ் பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
இந்த சிறுவன், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த சில நாட்களில் கெல்லீஸ் பகுதியில் மீண்டும் ஏடிஎம் திருட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு, அதே பகுதியில் உள்ள சிறுவர் சிறுத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஆவடி ஏடிஎம் திருட்டு வழக்கில் சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆவடி குற்றப்பிரிவு போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து சிறுவனை அழைத்துக்கொண்டு மின்சார ரயில் மூலமாக திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு நேற்று முன்தினம் காலை சென்றனர்.
வழக்கு விசாரணைக்கு ஆஜர்ப்படுத்தி விட்டு, மீண்டும் சிறுவனை கெல்லீசில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைக்க அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரயிலில் நேற்று முன்தினம் மாலை அழைத்து வந்தனர். அப்போது ரயில் பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் நின்று கிளம்பிய போது சிறுவன் திடீரென போலீசாரின் கையை உதறிவிட்டு ரயிலில் இருந்து கீழே குறித்து ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை பிடிக்க முற்பட்டபோதும் சிறுவன் சிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆவடி குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து பெரம்பூர் இரும்பு பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன் பேரில் பெரம்பூர் இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர்.
மேலும், ஆவடி குற்றப்பிரிவு போலீசாரும் தொடர்ந்து சிறுவனை தேடி வருகின்றனர். சிறுவன் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவன் என்பதால் ரயில் மூலம் வட மாநிலத்திற்கு அவன் தப்பித்து இருக்கலாம் என்பதால், தனிப்படை அமைத்து சிறுவனை பிடிக்க முடிவு செய்துள்ளனர்.
The post சீர்திருத்த பள்ளியில் அடைக்க சென்றபோது ரயிலில் இருந்து கீழே குதித்து சிறார் கைதி தப்பி ஓட்டம்: தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.