சீர்காழி அருகே பல நூற்றாண்டு பழமையான மரம் முறிந்து விழுந்தது

1 week ago 5

*கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் பக்தர்கள் அதிர்ச்சி

சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேசுவரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சமய குறவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும்.மேலும் இக்கோயிலில் நவகிரகங்களில் ஒன்றான புதன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமாக புராணங்கள் கூறுகின்றன. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர்.இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் பல் நூற்றாண்டுகள் பழமையான அரச மரம் உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டி, பெண்கள் இந்த மரத்தை சுற்றி வந்து வழிபட்டு செல்வர். அவ்வாறு வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த நிலையில் நேற்று பலத்த இடி, மின்னல், காற்றுடன் பெய்த கன மழையின் போது இந்த அரச மரம் இரண்டாக பிளந்து முறிந்து விழுந்தது. விரைவில் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கும் நிலையில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தல விருச்சக மரம் விழுந்திருப்பது பக்தர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணி அளவில் பலத்த சூறாவளி காற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. பலத்த காற்றுடன் மழை கொட்டியதால் மின்தடை ஏற்பட்டு 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.

மேலும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தும், மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மரங்களும், மரக்கிளைகளும் முறிந்தன. நேற்று முன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டடு, நேற்று மாலை வரை பல்வேறு கிராமங்களில் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இரவு பகலாக மின்சார ஊழியர்கள் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குருக்கத்தி, கூத்தூர், பட்டமங்கலம், தேவூர், அகரகடம்பனூர் உள்ளிட்ட பகுதிகள், சிக்கல், பொரவச்சேரி ஆவராணி, புதுச்சேரி பெருங்கடம்பனூர், சங்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென சூறைக்காற்று வீசியது. இதனால் கீழ்வேளூர் பகுதி முழுவதும் புழுது, குப்பைகள் பறந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். சூறைக்காற்று வீசியதை தொடர்ந்து பரவலாக மழை பெய்ய ஆரம்பித்து பின்னர், மழை வலுக்க தொடங்கியது. பின்னர் அடை மழை பெய்தது. சூறைக்காற்றுடன், அடை மழை பெய்ததனால், கீழ்வேளூர் பகுதியில் ஒரு இடத்தில் மின்கம்பம் சாய்ந்தது. திருவாரூரில் இருந்து வரும் மின்சார கம்பிகள் 5 இடங்களில் அறுந்து விழுந்தது. இதன் காரணமாக கீழ்வேளூர் பகுதியில் சுமார் 10 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

இதே போல் சிக்கல் சுற்று வட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், 3 இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. மேலும் புதுச்சேரி கீழத்தெரு பகுதியில் மின்கம்பம் சாய்ந்தது.

இதனால் சிக்கல் சுற்று வட்டாரத்தில் சுமார் 10 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. மழை நின்றவுடன் மின்சாரத்துறை ஊழியர்கள், மின்கம்பிகளை மீண்டும் இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் மின் கம்பிகள் இணைக்கும் பணி, புதிய கம்பிகள் பொருத்தும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டதன் காரணமாக, நேற்று காலை மின்சாரம் வழங்கப்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட காரணத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

600 ஏக்கர் வாழை பயிர் நாசம்

மயிலாடுதுறை அருகே கீழையூர், பொன்செய், கிடாரங்கொண்டான், செம்பதனிருப்பு, பல்லக்கொல்லை மற்றும் சுற்றுப்பட்ட கிராமங்களில் பலத்த சூறைக்காற்று வீசியதில் தார்ப்போட்டு முற்றாத நிலையில் இருந்த 100 ஏக்கர் வாழை மரங்கள் முற்றிலும் முறிந்து விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கொற்கை கிராமத்தில் பலத்தகாற்றால் இரண்டு டிரான்ஸ்பார்கள் முறிந்து விழுந்ததோடு மின்கம்பிகள் அறுந்து சாலையோரங்கள் விழுந்தது.

பல்வேறு கிராமங்கள் நேற்று பகல்வரையில் மின்விநியோகம் தடைப்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கடுவெளி, ஆச்சனூர், கோனேரிராஜபுரம், தில்லைஸ்தானம், வடுகக்குடி, சாத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடியை விவசாயிகள் அதிக அளவில் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, இந்த பகுதியில் சுமார் 10,000 ஏக்கர் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குழைதள்ளிய மரங்களில் வாழைத்தார்கள் வெட்டி விற்பனைக்கு தயாராக உள்ள நிலையில், நேற்றுமுன்தினம் இரவு வீசிய சூறாவளி காற்றில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து சேதமடைந்துள்ளன. ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து தார் வெட்டும் பருவத்தில் வாழைத்தாரோடு மரங்கள் முறிந்து சாய்ந்துள்ளதால் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

The post சீர்காழி அருகே பல நூற்றாண்டு பழமையான மரம் முறிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Read Entire Article