சித்ரா பௌர்ணமி (12.5.2025)
1. முன்னுரை
வேதங்கள் நான்கு. ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம். வேதங்களுக்கு அங்கங்கள் ஆறு. வேதங்களைப் புரிந்துகொள்ளவும் வேதங்களில் சொல்லப்பட்ட கர்மாக்களைச் செய்யவும் துணையாக இருப்பவை இந்த அங்கங்கள். இந்த அங்கங்களில் ஒன்று ஜோதிடம். ஜோதிஷம் என்று சொன்னாலே ஒளி என்று பொருள். மெய்தான் ஒளி. மெய்ப்பொருளைக் காட்டும் வேதங்களைப் புரிந்து கொள்ள வழிகாட்டும் கலைதான் ஜோதிஷம்.
இன்றைக்கு அந்தப் பெயர் தனி மனிதர்களின் எதிர்காலத்தைப் புரிந்து கொள்ளும் கலையாகப் பரிணமித்திருக்கிறது. ஆன்மிகத்தின் அர்த்தங்களைப் புரிந்து கொள்வதற்கும், அதில் சொல்லப்பட்ட கர்மாக்களைச் செய்வதற்கும் துணை புரிவது ஜோதிடம்.
2. விழாக்களின் கால நிர்ணயம்
வாழ்க்கையாக இருக்கட்டும் ஆலயங்களில் நடைபெறும் பல்வேறு வித மான விழாக்கள் உற்சவங்களாக இருக்கட்டும் அவைகளுக்கான காலத்தை வரையறைப் படுத்தித் தருவது ஜோதிட சாஸ்திரம். மேஷ ராசியில் சூரியன் நுழையும் மாதம் சித்திரை. வசந்த ருதுவில் முதல் மாதம். சித்திரை மாதத்தில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம் என்பதை வரை யறுத்து தருவது ஜோதிட சாஸ்திரம். அதனால்தான் பஞ்சாங்கங்களில் கோயில் உற்சவங்கள், தனிமனிதர்கள் செய்து கொள்ள வேண்டிய பல்வேறு சடங்குகளுக்கான நாள் குறிப்புகள், சுப காலங்கள், சில காரியங்களை செய்யாமல் தவிர்க்க வேண்டிய நேரங்கள் என்றெல்லாம் காலத்தை வகைப்படுத்தி குறிப்பிட்டிருக்கிறார்கள்.
3. திதிகளும் நட்சத்திரங்களும்
காலநேர கணிதத்தின்படி தான் ஆகம சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட பல்வேறு விதமான உற்சவங்கள் கோயில்களில் நடத்தப்படுகின்றன. உற்சவங்களில் திதியை மையப்படுத்தி சில உற்சவங்கள், மாதத்தை மையப்படுத்தி சில உற்சவங்கள், நட்சத்திரத்தை மையப்படுத்தி சில உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. திதியை மையப்படுத்துகின்ற உற்சவங்கள் ராம நவமி, கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, ரதசப்தமி என்றெல்லாம் வரும். நட்சத்திரத்தை சம்பந்தப் படுத்திய உற் சவங்கள் திருக்கார்த்திகை,. ஆவணி அவிட்டம், வைகாசி விசாகம். திருவோண விரதம். மாசிமகம் என்று வரும். இதில் நட்சத்திரங்களும் திதியும் இணைவது உண்டு. நட்சத்திரங்களும் மாதங்களும் இணைவது உண்டு. மாதங்களும் திதிகளும் இணைவது உண்டு.
4.அமாவாசையும் பௌர்ணமியும்
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரத்தைக் குறிக்கும் ஒரு கால அளவீடு. இது ஒரு நாளில் தொடங்கி, தோராயமாக 19 முதல் 26 மணி நேரம் வரை நீடிக்கும். சூரியனும் சந்திரனும் இணையும் திதி அமாவாசை. அன்று நிலவு தெரியாது. சூரியனும் சந்திரனும் எதிரெதிரே இருக்கும் திதி பௌர்ணமி. அன்று முழுநிலவு வானத்தில் தெரியும். சந்திரன் சூரியனை நோக்கி நகர்ந்து சூரியனோடு இணையும் திதி வரை தேய்பிறை என்றும் சூரியனோடு இணைந்த நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முழு நிலவு ஆகும் வரை உள்ள காலத்தை வளர்பிறை என்றும் சொல்வார்கள். அமாவாசை என்பது பெரும்பாலும் முன்னோர் வழிபாட்டிற்கான நாளாகவும், முழு நிலவு நாளான பௌர்ணமி தெய்வ வழிபாட்டிற்கான நாளாகவும் கொள்வார்கள்.
5. சித்ரா பவுர்ணமி
இதில் பௌர்ணமி என்கின்ற பெயரோடு ஒரு சிறப்பான விழா இருக்கிறது என்று சொன்னால் அது சித்ரா பௌர்ணமி. சித்திரை என்பது வருடத்தின் முதல் மாதம். இந்த முதல் மாதத்தில் வானத்தில் முழு நிலவு நாளில் உற்சாகமான பண்டிகையை கொண்டாடுவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். பெரும்பாலும் பௌர்ணமி நிகழும் நட்சத்திரத்தின் பெயர் தான் அந்த மாதத்தின் பெயராகவும் அமைந்திருக்கும். சித்ரா பௌர்ணமி உத்தராயணத்தில் முக்கியமான பருவமான வசந்தகாலத்தில் கொண்டாடப்படும் விழாவாகும். சித்ரா பௌர்ணமியின் சிறப்பு குறித்தும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் மற்ற முக்கியமான விழாக்கள், பண்டிகைகள் பற்றிய சிறப்புக்களையும் இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
6. மதுரை சித்திரைத் திருவிழா
சித்ரா பௌர்ணமி என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் தான். இணைந்து நம் நினைவுக்கு வருபவர் மதுரை அழகர். சித்ரா பௌர்ணமியில் தான் மதுரை மீனாட்சி அம்மனுக்கு சித்திரைத் திருவிழாவும், அழகருக்கு வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவும் கோலாகலமாக நடைபெறும். தமிழ்நாட்டு பக்தர்களின் மொத்த பார்வையும் மதுரை நகரத்தின் மையப் புள்ளியில் தான் குவிந்திருக்கும். அதில் முதலில் மதுரை மீனாட்சி அம்மன் சித்திரைத் திருவிழாக் குறித்துக் காண்போம்.மதுரை புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்த ரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது.
7. முக்கிய விழாக்கள்
தென்மாவட்டங்களில் திருவிழா என்றாலே மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாதான். மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றால் மதுரை மாவட்டம் முழுவதும் கொடியேற்றம் நடந்ததாக மதுரை மக்கள் கருதுவார்கள். கொடியேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு மதுரை மாவட்டம் முழுவதும் விழா கோலம் பூண்டு வெகு விமர்சையாகக் காட்சியளிக்கும். இதோடு அழகர் திருவிழாவும் சேர்ந்து கொள்ளும். மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், சித்திரைத் தேர், கள்ளழகர் எதிர் சேவை, அழகர் ஆற்றில் இறங்குதல் முதலிய நிகழ்வுகள் சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வுகள், இதில் சித்ரா பௌர்ணமி அன்று அழகர் வைகை ஆற்றில் இறங்குவார்.
8. மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்
மதுரை நகராளும் மீனாட்சி என்றொரு பாடல் உண்டு. சித்திரைத் திருவிழாவில் தான் மதுரை மீனாட்சி பட்டத்து அரசியாக முடிசூடி கொள்கின்றாள். சித்திரைத் திருவிழாவின் எட்டாம் நாள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். சித்திரை 23ம் நாள் – மே 6 ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7.35 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் பூர நட்சத்திரத்தில் அருள்மிகு மீனாட்சியம்மனுக்கு அம்மன் சந்நதி ஆறுகால் பீடத்தில் வைத்து பட்டாபிஷேகம் நடைபெறும். அப்போது அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சாற்றி ரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் கொடுக்கப்படும்.பட்டாபிஷேகத்தின்போது, மீனாட்சி அம்மன் விதம் விதமான நகைகளால் அலங்கரிக்கப்பட்டு, காட்சி தருவார்.
9. திக் விஜயம்
இந்த நிகழ்வில், சபாநாயகர் புறப்பட்டு ஊடல் லீலை நடைபெறும். மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக முடி சூட்டிக் கொண்டு பாரம்பரிய வேப்பம்பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்த பின்பு சித்திரை மாதம் முதல் ஆவணி மாதம் வரை மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்கும். அன்று இரவு பட்டத்து அரசியாக நான்கு மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன் வலம் வருவார்.
சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் திருவிழாவான திக் விஜயம் சித்திரை மாதம் 24ம் நாள் மே 7ஆம் தேதி புதன்கிழமை காலை 7:00 மணிக்கு நடைபெறும். அதனைத் தொடர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் அம்மன் மரவர்ணச் சப்பரத்தில் எழுந்தருள்வார். மாலை 6.00 மணி அளவில் மீனாட்சியம்மன் மீண்டும் இந்திர விமானத்தில் நான்கு மாசி வீதிகளில் வலம் வருவார். திரு வீதி உலா நிறைவு பெற்று இரவு 11:30 மணிக்கு மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்து சேர்வார்.
10. மீனாட்சி திருக்கல்யாணம்
சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு மேற்கு ஆடி வீதியில் உள்ள பிரம்மாண்ட திருக்கல்யாண மண்டபத்தில் சித்திரை 25 ம் நாள், மே 8 ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் நடைபெறும். திருக்கல்யாண மேடை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மதுரை மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட உள்ளூர் ரகப் பூக்களும், பெங்களூரு ரோஸ், வெளிநாட்டிலிருந்து தாய்லாந்து ஆர்க்கிட் மற்றும் பல வண்ண மலர்கள் உள்பட சுமார் 10 டன் மலர்கள் அலங்காரத்திற்கு பயன் படுத்துவார்கள். பூக்கள் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் ஈடுபடுவர். வாழை மரத் தோரணங்களும் கோயில் வளாகம் முழுவதும் கட்டப்பட்டு விழாக் கோலம் பூண்டிருக்கும்.
11. யார் யார் பங்கேற்பார்?
தேவாதி தேவர்களும் ரிஷிகளும் பங்கேற்கும் தெய்வத் திருவிழா அல்லவா இது. அத்தனைத் தெய்வங்களும் இந்தத் திருவிழாவுக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கூடுவதால் அன்றைக்குக் கோயிலுக்குச் சென்று திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்பது முப்பத்து முக்கோடி தேவதைகளின் ஆசிகளையும் பெறுகின்ற நல்வாய்ப்பாக அமையும். திருக்கல்யாணத்தில் பங்கேற்க திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் முதல்நாள் மாலையில் திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்பாடாகி காலை 6 மணியளவில் கோயிலை வந்தடைவர். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண நிகழ்வுகள் தொடரும்.
சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிப்பார் அன்னை மீனாட்சியும் சுவாமியும் திருமணக் கோலத்தில் மீனாட்சி அம்மன் கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். திருக்கல்யாணத்தைப் பார்க்க வந்த பக்தர்கள் அனைவரும் தங்களின் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்ளும் நிகழ்வும் நடைபெறும். திருக் கல்யாணத்தை நேரில் பார்க்கவர முடியாத பக்தர்கள் அவர்களது வீட்டிலேயே அந்த மங்கள நேரத்தில் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்வார்கள்.
12. தேர்
சித்திரை திருவிழாவின் பதினொன்றாம் நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் சித்திரை 26ஆம் நாள் – மே 09 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை நடைபெறும்.மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள தேர்முட்டி பகுதியில் அதிகாலை 5.05 மணிமுதல் 5.29 மணிக்கு மேஷலக்னத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் தனித்தனித் தேரில் எழுந்தருள்வர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து இழுப்பர். மாசி வீதிகள் எங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். இதே நேரம் திருமாலிருஞ்சோலை அழகர் கோயிலிலும் சித்திரை விழா நடந்து கொண்டிருக்கும்.
13. அழகர்
மதுரையைச் சுற்றி 3 அழகர்கள் இருக்கிறார்கள். ஒன்று மாலிருஞ்சோலை அழகர். இன்னொன்று திருமோகூர் அழகர். மூன்றாவது மதுரையிலேயே இருக்கக்கூடிய கூடல் அழகர். திருமாலிருஞ்சோலை அழகருக்கு கள்ளழகர் என்று பெயர். கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என மாறியது. இதனால் கள்ளர் இனத்திற்கு தலைவராகவும் குல தெய்வமாகவும் அழகர் இருக்கிறார். சித்திரை விழாவில் தங்கக் குதிரையில் அழகர் கம்பீரமாக வைகையில் இறங்கும் போது காண ஆயிரம் கண் வேண்டும்.
14. அழகர் சித்திரை திருவிழா 2025
இந்த ஆண்டு அழகர் திருவிழா சித்திரை மாதம் 27-ஆம் தேதி (10.5.25) தொடங்கி வைகாசி 3 வரை (17.5.25)வரை நடைபெறும்.
மே 10, 2024 – சனிக்கிழமை ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலத்தில் மாலை 6:00 முதல் 6:15 மணிக்குள் மதுரை புறப்பாடு
மே 11, 2025 – ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் மூன்று மாவடியிலும் இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவைமே 12, 2025 – திங்கட்கிழமை காலை 5:45 மணி முதல் 6:05 மணிக்குள் ஸ்ரீகள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் 1000 பொன்சம்பரத்துடன் சைத்யோ பசாரம் வண்டியூர் (இரவு)
மே 13, 2025 – செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் ஸ்ரீகள்ளழகர் வண்டியூர் தேனுர் மண்டபத்தில் சேஷ வாகனம், கருட வாகனம், பிற்பகல் 3 மணியளவில் மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், இரவு 10 மணியளவில் தசாவதார காட்சி. இடம்: ராமராயர் மண்டபம்.
மே 14, 2025 – புதன்கிழமை – காலை 6 மணியளவில் மோகனாவதாரம். பிற்பகல் 2 மணியளவில் இராஜாங்க அலங்காரம். இரவு 11 மணியளவில் கள்ளழகர் திருக்கோலம். புஷ்ப பல்லக்கு மைசூர் மண்டபம்.
மே 15, 2025 – வியாழக்கிழமை, ஸ்ரீகள்ளழகர் திருமலை திரும்புதல்.
மே 16, 2025 – வெள்ளிக்கிழமை, காலை 10 மணிக்குள் ஸ்ரீகள்ளழகர் திருமலை எழுந்தருளல்.
மே 17, 2025 – சனிக்கிழமை, உற்சவ சாற்றுமுறை.
15. விழாவின் வரலாறு
மீனாட்சி திருமணம் காண, மதுரை வரும் அழகர், திருமணம் முடிந்ததால், வைகை ஆற்றுக்கு வந்து திரும்புவதாக சொல்கிறார்கள். ஆனால், வைணவ தலபுராணம் கூறும் கதை வேறு. சுதப முனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது துர்வாச முனிவரை கவனியாது இருக்கக் கண்டு கோபமுற்ற துர்வாசர், சுதப முனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சுதப முனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் தவமியற்றி திருமாலால் சாபம் நீங்கப் பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலைநம்பி என்று தமிழிலும் வழங்கப்படுகிறது.
16. மாசித் திருவிழா மாறியது
16ம் நுாற்றாண்டு வரை, அழகரின் சித்திரை உற்சவம் (சைத்ரோத் சவம்) சித்திரை மாதத்திலும், மீனாட்சி அம்மனின் உற்சவம் மாசி மாதத்திலும் நடைபெற்றது. மீனாட்சி அம்மன் உற்சவத்தின் மிக முக்கியமான நிகழ்வு திருத்தேர் மாசி மாதத்தில் நடைபெற்றது. இந்த திருத்தேர் ஓடும் வீதிகளுக்கு மாசி வீதி என்றே பெயர். திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லுார், தேனுார் ஆகிய ஊர்கள் வழியாக சோழவந்தான் வந்து அங்குள்ள வைகையாற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று நடை பெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில், வெவ்வேறு மாதங்களில் நடைபெறும் இந்த விழா ஒரே மாதத்தில் நடைபெற்றால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று, கள்ளழகரை “மதுரை வைகையாற்றில்” எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தினார்.
17. வைகையில் இறங்குதல்
அழகர் மலையில் இருந்து ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலத்தில் கண்டாங்கி சேலை கட்டி மதுரைக்கு பல்லக்கில் அதிர்வேட்டு முழங்க அழகர் கிளம்புவார். மே 11 ஆம் தேதி இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை நடைபெறும். 12 ஆம் தேதி திங்கள் கிழமை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
தல்லா குளம் பெருமாள் கோயிலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் வைகையை நோக்கி புறப்படும் முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்திருக்கும் ஆண்டாளின் மாலையைச் சூடிக் கொள்வார். ஸ்ரீஅழகர் ஆற்றுக்குச் செல்லும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும் . மதுரைக்கு வரும் அழகரை பக்தர்கள் சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம் ஏற்றி எதிர் கொண்டு அழைப்பார்கள்.
18. வண்டியூர் உற்சவம்
ஆற்றில் இறங்கிய அழகர் ஆற்றின் வழியாகவே வண்டியூர் போய்ச் சேருகிறார். அங்கு சந்தன அலங்காரம் செய்து கொண்டு இளைப்பாறி சர்ப்ப வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்து சேருகிறார். கள்ளழ கருக்கு செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபினர்கள் தொன்று தொட்டு சீர்பாத சேவை செய்து வருகின்றனர். வண்டியூர் தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் அருள்பாலிக்கிறார். பின் கருட வாகனத்தில் எழுந்தருளும் அழகர் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் தருகிறார். தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு வந்து தங்குகிறார்.
இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் தல்லா குளத்திலுள்ள சேதுபதி ராஜா மண்டபம் வரைக்கும் வருவார். வழியெங்கும் மக்கள் சுக்கும் வெல்லமும், தந்து அழகரின் வருகையை பக்தியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடுவார்கள். பின் மோகனாவதாரத்திலும் இரவு கள்ளழகர் திருக்கோலத்தில் புஷ்ப பல்லக்கில் அழகர் கோவிலுக்கு திரும்புகிறார். அவரை வழியனுப்பவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை எல்லையான புதூர், மூன்று மாவடி பகுதிகளில் திரண்டிருப்பார்கள். மதுரை ஆற்றில் கள்ளழகர் விழா காண்பது போலவே மானாமதுரையில் சுந்தரவரதரும், பரமக்குடியில் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளும் ஆற்றில் இறங்குகிறார்கள்.
19. நரசிம்ம ஜெயந்தி
சித்ரா பௌர்ணமி ஒட்டி மே மாதம் 11ம் தேதி நரசிம்ம ஜெயந்தி வருகிறது எல்லா திருமால் ஆலயங்களிலும் நரசிம்ம ஜெயந்தி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அந்தந்த கோயில் வழக்கப்படி கொண்டாடப் படும் நரமும் சிங்கமும் கலந்த நிலைதான் நரசிங்கம். “நரம்” என்பது மனிதன். அதாவது, மனித உருவம். இந்த உருவத்தோடு சிங்க உருவம் கலந்த ஒரு திருவுருவம் தான் நரசிம்மரின் திருவுருவம்.
நரசிம்ம அவதாரத்தின் இன்னொரு சிறப்பு என்ன என்று சொன்னால், அவரிடம் வைக்கப்படும் எந்த கோரிக்கையும், எப்படி அவர் உடனடியாக அவதாரமெடுத்து, பிரகலாதனுடைய துன்பத்தைத் தீர்த்தாரோ அதைப் போலவே நொடி நேரத்தில் துன்பத்தைத் தீர்ப்பான். எனவே, மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறவர்கள், உடனடித் தீர்வுக்காக, ஸ்ரீநரசிம்மருக்கு பானகம் வைத்து, நெய் தீபம் ஏற்றி, பிரார்த்தனை செய்வார்கள். ‘‘நாளை என்ற பேச்சு நரசிம்மனிடத்தில் இல்லை” என்பது பக்தர்களின் நம்பிக்கை.
20. எப்படிக் கொண்டாட வேண்டும்?
எந்த ஆபத்தையும் தீர்க்கக்கூடிய, எல்லா மங்களங்களையும் தரக்கூடிய, நரசிம்ம மூர்த்தியின் திருப்பாதங்களை, இந்த ஜெயந்தி நாளன்று, மாலை வீட்டில் விளக்கேற்றி, வெல்லப் பானகம் நிவேதனம் செய்து, போற்றி வணங்குவோம். நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மரின் மகா மந்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் 108முறை உச்சரிக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் நீங்கா துன்பங்களும் நீங்கும் என்பதுதான் நம்பிக்கை.
நரசிம்மரின் மகாமந்திரம் இதோ…
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
21. வசந்த ருது
சாமங்களில் (வேதப் பகுதியில்) நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமமாகவும், சந்தஸ்களில் நான் காயத்ரியாகவும், மாதங்களில் நான் மார்கழியாகவும், பருவங்களில் நான் இளவேனில் எனப்படும் வசந்த காலமாகவும் இருக்கிறேன் என்கிறான். வசந்தருது வருஷத்தில் முதல் ருது. அதில் முதல் மாதம் சித்திரை மாதம் என்பதால் இதற்குத் தனிச் சிறப்பு உண்டு. இராமபிரான் பட்டாபிஷேகம் செய்த மாதம் இந்த சித்திரை மாதம். இந்தச் சித்திரை மாதத்திற்கு அதிதேவதை விஷ்ணு. சித்ரா பவுர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. சித்திரை மாதம் வளர்பிறை பஞ்சமியில்தான் திருமகள் பூலோகத்திற்கு வந்ததாக ஒரு வரலாறு உண்டு. அதைப்போலவே சித்திரைப் பௌர்ணமியன்று கஜேந்திர மோட்சம் நடைபெறும்.
22. கஜேந்திர மோட்சம்
கஜேந்திர மோட்சம் என்பது, பாகவத புராணத்தின் எட்டாவது ஸ்கந்தத்தில் இடம் பெற்றுள்ள, முதலையின் பிடியில் சிக்கிய கஜேந்திரனை (யானையை), விஷ்ணு மோட்சம் அளித்து மீட்கும் புகழ்பெற்ற கதை. இந்த கதை, கஜேந்திர மோட்சத் திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. பாகவத புராணம் கஜேந்திர மோட்ச வரலாற்றை கேட்டாலே மிகவும் புண்ணியம் என்று கூறுகிறது. வேதாந்த தேசிகர் என்னும் ஆச்சாரியர், “வாரணம் அழைக்க வந்த காரணன்” என்ற சிறப்பு அடைமொழியுடன் எம்பெருமானை மும்மணிக்கோவை என்ற நூலில் அழைக்கிறார். ‘‘பதக முதலைவாய்ப் பட்ட களிறு, கதறிக் கை கூப்பி என் கண்ணா, கண்ணா என்ன உதவப் புள்ளூர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த, அதகன்” என்று பெரியாழ்வார்
கொண்டாடுகின்றார்.
23. யானையின் சாபம்
இந்திரத்யும்னன் என்னும் மன்னன் மிகச் சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு அவன் பூஜையில் இருக்கும் போது, துர்வாசர் வந்தார். தன்னை மறந்திருந்த மன்னன் துர்வாசர் வந்ததை அறியவில்லை. அவர் வந்திருக்கிறார் என்று சேவகர்கள் சொன்னதும் அவர் காதில் விழவில்லை. காரணம் பகவான் விஷ்ணு பூரணமாக அவன் புலன்களில் நிறைந்திருந்தார்.. துர்வாச முனிவர் அவன் மீது மிகவும் சினங்கொண்டார். யானையைப் போலச் செருக்குடன் இருந்ததனால், யானையாகப் போகும் படி சாபமிட்டார். நிலையுணர்ந்த மன்னன் தன் தவறினை உணர்ந்து முனிவரிடம் சாப விமோசனம் வேண்டி நின்றான். சினந்தணிந்த முனிவர் நீ யானையாக இருந்தாலும் திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாகத் திகழ்வாய். விஷ்ணு பக்தியால் உனக்கு மோட்சம் கிடைக்கும் என்றார்.
24. முதலையின் சாபம்
கூஹு என்னும் கந்தர்வன் ஒருவன் ஒரு நாள், தேவல மகரிஷி தண்ணீரில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருக்கும் போது அவரின் காலைப் பிடித்து இழுத்தான். அவர் நீரில் மூழ்கி நீராடும் பொழுது காலைப் பிடித்து இழுப்பதும், வெளியே வந்து யார் என்று தேடும் பொழுது நீருக்குள் மறைவதுமாக போக்குக் காட்டிக் கொண்டிருந்தான். இந்த விளையாட்டு அவனுக்குப் பிடித்திருந்ததால் நெடுநேரம் விளையாடினான். கோபம் கொண்ட தேவல மகரிஷி அவனை ஒரு முதலையாகப் பிறக்க சாபம் இட்டார். அவனும் விமோசனம் வேண்ட நீ கஜேந்திரன் என்னும் யானையின் காலை பிடித்து இழுக்கும் போது திருமாலின் அருளால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார்.
25. பௌர்ணமியில் சாப விமோசனம்
சாபம் பெற்ற அரசன் யானையாகப் பிறந்தான். கஜேந்திரன் என்றால் யானைகளின் தலைவன். திரிகூடமலையில் உள்ள யானைக் கூட் டத்தின் தலைவனாக வாழ்ந்தான். ஒவ்வொருநாளும் தன்னுடைய பழைய நினைவால், தாமரை மலர் ஒன்றினைப் பறித்து மகாவிஷ்ணுவின் திருப் பாதங்களுக்குச் சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒருநாள் தனது யானை கூட்டத்துடன் நீர்நிலையை நோக்கி சென்றான். அந்தத் தடாகம் அழகாகவும் ஆழமாகவும் இருந்தது. தூரத்தில் தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன. அதைப் பறிக்க எண்ணிய கஜேந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக ஆழமான பகுதியில் காலை வைத்தான்.
அப்பொழுது அந்த குளத்தில் வாழும் முதலை கஜேந்திரனின் கால்களைப் பற்றியது. முத லையின் வாயில் அகப்பட்ட கால்களுடன் உயிருக்கு போராடிய கஜேந்திரனை மற்ற யானைகள் காப்பாற்ற முயன்று தோல்வியுற்றன. தனது இறுதிக் காலம் நெருங்குவதை உணர்ந்த யானை, ஒரு தாமரை மலரை தனது தும்பிக்கையால் பற்றி வான் நோக்கி ஆதிமூலமே என பெருமாளை நோக்கிச் சரணாகதி செய்தது.தனது பக்தனின் துயர் துடைக்க விரைந்து வந்த பெருமாள் தனது சக்ராயுதத்தால் முதலையின் தலையை துண்டித்து யானையை விடுவித்து மோட்சம் அளித்தார்.
26. கபிஸ்தலமும் ஸ்ரீரங்கமும்
திருவல்லிக்கேணி பாசுரத்தில் இந்த நிகழ்வுகளை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றார் திருமங்கை ஆழ்வார்.
‘‘மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத்து அலறக்
கரா அதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து
சென்று நின்று ஆழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே”
இதனை கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலம் என்ற திவ்யதேச ஸ்தலபுராணத்திலும் அறியலாம். சித்ரா பௌர்ணமி அன்று திரு வரங்கத்தில் கஜேந்திர மோட்ச விழா சிறப்பாக நடைபெறும்.
27. அம்மா மண்டபத்தில் நடைபெறும் கஜேந்திர மோட்சம்
‘‘விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய், வெள் எயிறு உற அதன் விடத்தி னுக்கு அனுங்கி, அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே” என்ற தொண்ட ரடிப்பொடி ஆழ்வார் பாசுரத்தின் படி ஸ்ரீரங்கத்தில் சித்ரா பவுர்ணமியன்று காவிரியாற்றின் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கஜேந்திர மோட்சம் நடத்திக் காட்டப்படும். இதையொட்டி காலை நம்பெருமாள் மூல ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழி நடை உபயங்கள் கண்டருளி அம்மா மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருள்வார்.
அங்கு நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்து. மாலை 6 மணியளவில் நம்பெருமாள் காவிரி ஆற்றில் இறங்குவார். காவிரியில் கிழக்கு நோக்கி நம்பெருமாளும், மேற்கு நோக்கி கோயில் யானையும் நிற்க, அப்போது கோயில் யானை ஆண்டாள் முதலை காலைப் பிடித்து கவ்வி இழுப்பது போல் நடித்துக் காட்டப்படும். அது சமயம் யானை அபயக்குரல் எழுப்பி பிளிற, அதனைத் தொடர்ந்து, நம்பெருமாளின் சடாரியை எடுத்து வந்து யானை மீது அர்ச்சகர்கள் வைப்பர். இந்த கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருப்பர்.
28. திருச் சித்ர கூடத்தில் சித்ரா பௌர்ணமி கருட சேவை
கஜேந்திர மோட்சம் என்றாலே கருட சேவை உற்சவம் தான். பெருமாள் கருடன் மீது பறந்து வந்த வேகத்தையும் பதட்டத்தையும் பராசர பட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் பகவதஸ் துவாராயை நம: என்று போற்றுகிறார். (பக்தனைக் காப்பாற்ற கருடன் மேல் ஓடிவந்த வேகத்திற்கு வணக்கம் என்று பொருள்) எம்பெருமானே சர்வ ரட்சகன் அவனைச் சரணடைந்தால் அவன் விலங்காக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் பகவான் ஓடிவந்து காப்பாற்றுவான் என்பது இதன் தத்துவம்.
தில்லை திருச்சித்ர கூடத்தில் (சிதம்பரம் பெருமாள் கோயில்) தேவாதி தேவனாக விளங்கும் பெருமாள் சித்ரா பௌர்ணமி அன்று காலை தாயார் சந்நதிக்கு எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருள்வார். கருட வாகனத்தில் ஏறிக் காட்சி தருவார். மாலை நான்கு வீதிகளிலும் கருட சேவை புறப்பாடு கண்டருளுவார். இவரை எட்டாம் நூற்றாண்டிலே திருமங்கையாழ்வார் “தெய்வப் புள்ளேறி வருவான் சித்திர கூடத்து உள்ளானே” என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
29. சித்திரகுப்த ஜெயந்தியும் சித்ரா பௌர்ணமியும்
சித்ரா பவுர்ணமியில் கொண்டாடப் படுகின்ற முக்கிய விழா சித்திரகுப்த ஜெயந்தி விழா. இந்த சித்திரகுப்தருக்கு காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகில் நெல்லுக்கார வீதியில் ஒரு ஆலயம் இருக்கிறது. அந்த ஆலயத்தில் சித்ரகுப்தருக்கு விசேஷமான பூஜைகள் நடந்து வருகின்றன. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோடாங்கி பட்டி எமதர்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
கோவை அருகே உள்ள சிங்காநல்லூர் எமதர்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக நடைபெறுகிறது. சித்ரகுப்தனுக்கு அதி தேவதை கேது. கேதுவுக்கு அதி தேவதை விநாயகர். பொதுவாக விநாயகரை வணங்கினால் நவகிரகங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால், சித்ரா பெளர்ணமியன்று அதிகாலையில் குளித்து விநாயகரை வழிபட வேண்டும். விநாயகருக்கு இந்த நன்நாளில் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், கொண்டைக் கடலை சுண்டல் ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.
30. சித்ரகுப்தன் கதை
சித்ர குப்தன் தோன்றியது குறித்து பல கதைகள் உண்டு. காலதேவன் எமன், தன்னால் இந்த ஜீவராசிகளில் பாவ புண்ணிய கணக்குகளையும், ஆயுள் கணக்குகளையும் பார்க்க முடியவில்லை என்று சங்கடப்பட்டு சிவனை நோக்கி தவம் இருந்தான். உடனே அவருக்கு ஒரு உதவியாளரைத் தருவதற்காக சிவன் ஒரு தங்கப் பலகையில் சித்திரம் வரைந்தார். அந்த சித்திரத்திற்கு உயிர் கிடைத்ததால் அவருக்கு சித்திரகுப்தன் என்று பெயர் வைத்தார்கள்.
நீலாதேவி கர்னிகா தேவி என இரண்டு துணைவியாருடன் காட்சி அளிக்கக்கூடிய சித்திரகுப்தன் நம் வாழ்நாளில் நாம் செய்கின்ற பாவ புண்ணியக் கணக்குகளைத் தவறாது எழுதி அதனை கால தேவனுக்குச் சமர்ப்பிக்கும் வேலையைச் செய்கின்றார். நம்மை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிற அச்சம் ஏற்பட்டு தொடர்ந்து பாவம் செய்யாமல் இருப்போம். சித்ரகுப்தனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வணங்க வேண்டும். அன்று அன்னதானம், விசிறி, குடை, செருப்பு உட்பட பல தானங்களைச் செய்தால் புண்ணியம் கூடிப் பாவம் குறையும் என்பது நம்பிக்கை.
எஸ். கோகுலாச்சாரி
The post சீர் பெருக்கும் சித்ரா பௌர்ணமியும் மதுரை சித்திரை திருவிழாவும்!! appeared first on Dinakaran.