கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளிங்கிரி மலை அமைந்துள்ளது. 6 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைக்கு 6 மலை ஏறி செல்ல வேண்டும். வழியில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதை வனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை அமைந்துள்ளது. 7வது மலையில் சுயம்புவாக கிரி மலையில் வெள்ளிங்கிரி ஆண்டவர் காட்சி தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். பிப்ரவரி முதல் மே மாதம் வரை மலையேற அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த மலைக்கு செல்ல பெரும்பாலான பக்தர்கள் மூங்கில் குச்சிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூங்கில் குச்சி ஒன்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் இருந்து இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திருப்பதாக தெரிகிறது. சனி, ஞாயிறு தினங்களில் கூட்டம் மிக அதிகமாக வருகிறது. சித்ரா பவுர்ணமி நாளில் 2 லட்சம் பேர் மலையேறி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டாக முதல் மூன்று மலைகளின் படிக்கட்டுகள் சீரமைக்கப்படவில்லை.
முதல் மலை முழுவதும் கல் படிக்கட்டுகள் இருக்கிறது. இரண்டு மற்றும் மூன்றாவது மலையில் கல் படிக்கட்டுகள், பாறை முகடுகள் காணப்படுகிறது. சில இடங்களில் கற்கள் உருண்டு கிடக்கிறது. 6வது மலை இறங்கும் பகுதி சீரமைக்கப்படவில்லை. பக்தர்கள் தட்டு தடுமாறி தவழ்ந்த படி இறங்கி செல்ல வேண்டியிருக்கிறது. படிக்கட்டு பகுதிகளை சீரமைக்க, ஆண்டி சுனையில் பக்தர்கள் குளிக்கும் பகுதியை மேம்படுத்த வனத்துறை அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது. இந்து சமயஅறநிலையத்துறையினர் பக்தர்கள் சென்று வர பல்வேறு வசதிகளை செய்ய முன் வந்துள்ளனர்.
குறிப்பாக சோலார் விளக்கு, பல்வேறு இடங்களில் அறிவிப்பு பலகை வைக்க, சீரமைப்பு பணி நடத்த முன் வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் வனப்பகுதி பாதுகாப்பு கருதி வனத்துறையினர் எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்கவில்லை. ஒவ்வொரு மலை துவங்கும் இடம் முடியும் இடம் தொடர்பான அறிவிப்பு கூட பக்தர்களின் வசதிக்காக வைக்கப்படவில்லை. பக்தர்கள் தங்கும் கூடம் வைக்கவில்லை. மலைப்பகுதியில் முதலுதவி சிகிச்சை வசதி செய்து தரப்படவில்லை. முதல் மலை துவக்கத்தில் பக்தர்கள் பயன்படுத்திய பல ஆயிரம் மூங்கில் குச்சிகளை தூக்கி வீசி சென்றுள்ளனர். இந்த குச்சிகளை வனத்துறையினர் அகற்றவில்லை. மலையேறும் பக்தர்களுக்கு வழங்கப்படும் மூங்கில் குச்சிகள் போதுமான அளவு தரமாக இல்லை என தெரிகிறது.
இந்து சமய அறநிலையத்துறையினர் கூறுகையில், ‘‘மலையேறும் பக்தர்களுக்கு மலையில் 3 இடத்தில் சுனை நீர் பெற வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. சமீபத்தில் பெய்த மழையால் நீர் வரத்து அதிகமாக இருக்கிறது. மலைப்பாதை படிக்கட்டில் மாற்றம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கவில்லை. உடல் நோய் பாதிப்பு இருந்தால் மலை ஏற வேண்டாம் என பக்தர்களுக்கு அறிவிப்பு வழங்கி வருகிறோம். ஆண்கள் மட்டுமின்றி பெண் பக்தர்கள் சிலரும் மலையேறி சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இதில் மாற்றுப்பாதை, குறுக்கு பாதை வழியாக கிரி மலை செல்ல முடியாது. சில இடங்களில் பாதை அடைக்கப்பட்டிருக்கிறது’’ என்றனர்.
பாதை சீரானால் கூட்டம் குவியும்
மலைப்பாதை பகுதியில் கடை நடத்தி வரும் மலை கிராம மக்கள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டைவிட தற்போது கூட்டம் குறைவாக இருக்கிறது. பாதை நெருக்கடியாக இருப்பதால் மலை இறங்கும் பக்தர்களுக்காக மலை ஏறும் பக்தர்கள் சிலரை அதிக கூட்டம் இருக்கும்போது நிறுத்தி வைக்கிறார்கள். சில பக்தர்கள் அதிக தண்ணீரை அடிவாரத்தில் இருந்து சுமந்து வருகிறார்கள். வெளியூர் பக்தர்கள் குறிப்பாக வடமாநிலத்தை சேர்ந்த சிலர் இங்கே மலையேறி சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அடிப்படை வசதிகள் செய்தால் பக்தர்கள் வருகை அதிகமாகும்’’ என்றனர்.
The post சீரமைக்கப்படாத வெள்ளிங்கிரி மலைப்பாதை: வனத்துறை தடையால் பக்தர்கள் பரிதவிப்பு appeared first on Dinakaran.