நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சீமானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அக்கட்சியிலிருந்து விலகி வருவது அண்மைக்காலமாக தொடர் நிகழ்வாகி வருகிறது. திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் தங்களது குறைகளைச் சொன்ன நிர்வாகிகளை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருமையில் பேசியதாகச் சொல்கிறார்கள். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டத்திலிருந்து சில நிர்வாகிகள் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது நெல்லை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாவுக்கு தலைமை ஏஜென்டாக இருந்தவர் நெல்லை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வின். இவரும் இவரது ஆதரவாளர்களும் சீமானுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதற்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த சீமான், “நேர்மையாளன் என்பவன் சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும். சர்வாதிகாரியாக இல்லாவிட்டால் கட்சி நடத்த முடியாது” என்று சமாளித்தார்.