
நாம் தமிழர் கட்சி சார்பில் `மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 'ஆடு, மாடுகளின் மாநாடு' மதுரையில் நேற்று நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் கொண்டு வரப்பட்டு, மாநாட்டு திடல் நிறைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் ஆடுகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாடுகளையும், ஆடுகளையும் நோக்கி பேசியது வித்தியாசமாக அமைந்து இருந்தது.
இந்த நிலையில் ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளப்பட்டுள்ளார் என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-
சீமானின் நிலை இப்படி ஆகிவிட்டது என்பதை நினைக்கும்போதே, பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. அவர் மனிதனையே மனிதனாக நினைத்து பேச மாட்டார். மாக்களாகத்தான் நினைத்து வாய்க்கு வந்தபடி பேசுவார். அதன் உச்சமாக மதுரையில் ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அவரது உண்மை நிலையை வெளிப்படுத்தும் விதமாக, அந்த காட்சிகளை தமிழக மக்கள் பார்த்து விழுந்து, விழுந்து சிரிக்கும் சூழலை ஏற்படுத்தி விட்டார். அவரது கடைசி கட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது. எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். முதல் நாள் பேசியதையே, மறுநாள் மறுத்து பேசுகிறார். அடுத்த நாள் வேறொரு புதுக்கதையை, அவரே திரித்து பேசுவார். இவ்வாறு அவர் கூறினார்.