சீனாவில் வட கிழக்கு இந்தியா தொடர்பாக முகம்மது யூனுஸ் பேச்சு: பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம்

1 day ago 3

டெல்லி: சீனாவில் வட கிழக்கு இந்தியா தொடர்பாக முகம்மது யூனுஸ் பேசிய பேச்சுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் சீனா சென்ற வங்கதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் அந்நாட்டின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியாவின் வட கிழக்கில் உள்ள 7 மாநிலங்கள் நிலத்தால் கட்டுண்டு கிடப்பதாகவும், அந்த மாநிலங்களுக்கு கடல் மார்க்க பாதுகாப்புக்கு ஆதாரம் வங்கதேசம்தான் என்றும் கூறினார். மேலும் வங்கதேசத்துக்கு இருக்கும் இந்த புவியியல் நிலையைப் பயன்படுத்தி வங்கதேசத்தில் சீனா பொருளாதார ரீதியாக காலூன்ற வேண்டும் என்றும் முகம்மது யூனுஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

முகம்மது யூனுஸின் இந்த பேச்சுக்கு இந்திய தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், “வடகிழக்கு இந்தியாவின் ஏழு சகோதர மாநிலங்களை நிலத்தால் சூழப்பட்டவை என்றும் கடல் வழி பாதுகாவலராக வங்கதேசமே இருப்பதாகவும் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் என்று அழைக்கப்படும் முகமது யூனிஸ் வெளியிட்ட அறிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இக்கருத்து இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த “கோழிக் கழுத்து” வழித்தடத்துடன் தொடர்புடையது.

வடகிழக்கை பிரதான நிலப்பகுதியிலிருந்து தனிமைப்படுத்த இந்த முக்கியமான பாதையைத் துண்டிக்க பரிந்துரைப்பதாக உள்ளது. எனவே “கோழிக் கழுத்து” வழித்தடத்தின் அடியிலும் அதைச் சுற்றியும் மிகவும் வலுவான ரயில் மற்றும் சாலை நெட்வொர்க்குகளை உருவாக்குவது கட்டாயமாகும். இது குறிப்பிடத்தக்க பொறியியல் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்றாலும் உறுதி மற்றும் புதுமை முயற்சிகள் மூலம் அதை அடைய முடியும். முகமது யூனிஸின் இத்தகைய ஆத்திரமூட்டும் அறிக்கைகளை இலகுவாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் அவை ஆழமான மற்றும் நீண்டகால நிகழ்ச்சி நிரல்களை பிரதிபலிக்கின்றன” என அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியாவை சுற்றி வளைக்க சீனாவை வங்கதேசம் அழைக்கிறது. வங்கதேச அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை நமது வடகிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் ஆபத்தானது. அரசாங்கம் மணிப்பூரைப் பற்றி கவலைப்படவில்லை. சீனா ஏற்கனவே அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு கிராமத்தைக் குடியேற்றியுள்ளது. நமது வெளியுறவுக் கொள்கை மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதால் இந்தியாவுக்கு ஆதரவான நாடு இன்று நமக்கு எதிராக அணிதிரள்வதில் ஈடுபட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post சீனாவில் வட கிழக்கு இந்தியா தொடர்பாக முகம்மது யூனுஸ் பேச்சு: பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article