"சீனாவின் மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது.." - களமிறங்கப்படும் வடகொரிய ராணுவம் குறித்து ஜெலென்ஸ்கி வேதனை

2 weeks ago 6

கீவ்,

ரஷியா-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கி வருகிறது ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா ராணுவம் நேரடியாக களத்தில் இறங்கி உள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜான் அன் தன் ராணுவத்தின் அதிசிறப்பு படையை சேர்ந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வழங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைனை எதிர்த்து சண்டையிட உள்ள வடகொரியா வீரர்கள் குர்ஸ்க் நகரில் முகாமிட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கான முழு செலவையும் ரஷியா ஏற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஏற்கனவே சீருடைகள், போலி அடையாள ஆவணங்களை வழங்கி வடகொரியா வீரர்களை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா பயன்படுத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் வடகொரியாவின் தலையீடு குறித்த சீனாவின் மவுனம் அதிர்ச்சி அளிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக நடந்து வரும் போரில் வடகொரியப் படைகளை ஈடுபடுத்தும் ரஷியாவின் முடிவை ஜெலென்ஸ்கி கடுமையாக கண்டித்தார். ரஷியா வட கொரியாவுடன் வெளிப்படையாக கூட்டு சேர்ந்துள்ளது, தோராயமாக 3.5 மில்லியன் பீரங்கி குண்டுகளை வாங்கி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இந்த போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, விரைவில், உக்ரைனுக்கு எதிராக, நமது மக்கள், நமது நகரங்கள் மற்றும் நமது வாழ்க்கை முறைக்கு எதிராக ரஷியாவின் கொடூரமான ஆக்கிரமிப்பின் 1,000 நாட்களை நாம் அடைவோம். போர் நீண்டு கொண்டே செல்வதில் ஆச்சரியமில்லை.

ரஷியா இந்த போர் விரிவாக்கங்களில் ஒன்றாக வட கொரியாவுடன் பகிரங்கமாக கூட்டாளியாக பயணிக்க தொடங்கி உள்ளது. அவர்கள் மில்லியன் கணக்கான பீரங்கி குண்டுகளை வாங்கி வருகின்றனர். அந்த பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் எங்கள் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட உள்ளன. ஆனால் இப்போது அது வெறும் ஆயுதங்கள் அல்ல. 3,000 வட கொரிய ராணுவ வீரர்கள் தற்போது பயிற்சி முகாமில் இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. மேலும் அந்த எண்ணிக்கை 12,000 வீரர்கள் மற்றும் அதிகாரிகளாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட கொரியாவின் நடவடிக்கைகள் தற்செயலானவை அல்ல, சீனா எங்கள் பக்கம் இருப்பதாக நான் கருதுகிறேன். ஆனால் இந்த விவகாரத்தில் சீனாவின் மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது" என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

Read Entire Article