சீனாவின் டீப்சீக் ஏஐ செயலியை புதிதாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த தென் கொரிய அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யக்கூடிய கணினி அமைப்புகளை குறிப்பதாகும். இந்த பணிகளில் கற்றல், பகுத்தறிதல், சிக்கலைத் தீர்ப்பது, இயற்கை மொழியைப் புரிந்துகொள்வது மற்றும் புதிய தகவலை மாற்றியமைத்தல் ஆகியவை இதில் அடங்கும். தற்போது அமெரிக்காவை சேர்ந்த ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி, கூகுளின் ஜெமினி போன்றவை முன்னணி ஏஐ தொழில்நுட்பங்களாக உள்ளன.
இந்த வரிசையில் டீப்சீக் எனும் ஏஐ செயலியை சீனா அறிமுகப்படுத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு தொடர்பான விதிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து அந்தச் செயலியைப் புதிதாகப் பதிவிறக்குவதை தென் கொரிய அரசின் தரவு பாதுகாப்பு ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது.
இதனை, தென் கொரிய அரசின் தரவுகள் பாதுகாப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் தென் கொரியாவின் சட்ட திட்டங்களுக்கேற்ப டீப்சீக் செயலியின் தனிப்பட்ட தரவுகள் செயல்பாட்டு நடைமுறைகள் முழுமையாக ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். டீப்சீக் செயலியில் உள்நாட்டு தனியுரிமைச் சட்டங்களுக்கான பரிசீலனைகள் குறைவு என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தென் கொரியாவின் தனியுரிமைச் சட்டங்களுடன் அந்தச் செயலியை இணைப்பதற்கு அதிக காலம் செலவாகும் என்றும் தென் கொரிய தரவுகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக டீப்சீக் செயலியை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தென் கொரிய அரசு தடை விதித்துள்ளது.மேலும், டீப்சீக் செயலியின் பயன்பாட்டினைத் தவிர்க்க அதன் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, அந்தச் செயலியை ஏற்கனவே பயன்படுத்தும் பயனர்கள் இந்தத் தற்காலிகத் தடை தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்படும் வரை எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தனிப்பட்ட தகவல்களை டீப்சீக் செயலியில் உள்ளிடுவதைத் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளனர்.ஏற்கனவே பயன்படுத்தும் பயனர்கள் விவகாரத்தில் இறுதிமுடிவு எடுக்கும்வரை தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post சீனாவின் டீப்சீக் செயலியை புதிதாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த தென் கொரிய அரசு தற்காலிகமாக தடை..!! appeared first on Dinakaran.