புதுடெல்லி: சீனா – இந்தியா இடையிலான உறவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்களுக்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி சமீபத்தில் லெக்ஸ் ஃப்ரீட்மேனுடனான பாட்காஸ்ட் நேர்காணலில் அளித்த பேட்டியில், ‘சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சமீபத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியா – சீனா எல்லைப் பதற்றங்கள் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான போட்டிகள் மோதல்களாகவும், எங்களுக்குள் இடையிலான கருத்து வேறுபாடுகள் வாதங்களாகவும் மாறுவதைத் தடுக்க இந்திய அரசு முயற்சிக்கிறது. பிரிவினைக்கு பதிலாக பேச்சுவார்தைகளை வலியுறுத்துகிறோம்; ஏனென்றால் பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே இரு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்க முடியும்.
மேலும் நிலையான உறவை உருவாக்க முடியும்’ என்று கூறினார். சீனா – இந்தியா இடையிலான உறவுகள் குறித்து பிரதமர் மோடியின் கருத்துக்களுக்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், ‘இந்தியா – சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று ஒற்றுமை உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நட்புரீதியான பரிமாற்றங்கள் நடந்துள்ளன. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று கற்றுக்கொண்டு, மனித முன்னேற்றத்திற்கு பங்களித்துள்ளன. சீனா – இந்தியா உறவுகள் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறினார்.
The post சீனா – இந்தியா இடையிலான உறவு குறித்து மோடியின் கருத்துக்கு சீனா பாராட்டு appeared first on Dinakaran.