ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், சீன பீரங்கிகளை பயன்படுத்தி பாகிஸ்தான் சோதனை செய்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான், மேற்கத்திய நாடுகள், வளைகுடா நாடுகள் மற்றும் துருக்கியுடனான ராணுவ உறவுகளை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. சீனாவும், பாகிஸ்தானின் நீண்ட கால நட்பு நாடாக திகழ்ந்து வருகிறது. இந்த நாடுகளின் உதவியுடன் ஆயுத பலத்தை, பாகிஸ்தான் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டிரக்கில் பொருத்தி பயன்படுத்தும் ஹோவிட்சர் வகை, 155 எம்எம் பீரங்கி, எஸ்எச்-15ஐ மாதிரியாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள பீரங்கி உள்ளிட்டவற்றை, ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடருகே உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று சோதனை செய்து பார்த்தனர்.
பாகிஸ்தான் வீரர்கள் நேற்று சோதித்த எம்109 ரக பீரங்கிகள், ஒரே சமயத்தில் 6 குண்டுகளை, 40 நொடிகளில் 24 கிமீ துாரம் செலுத்தி தாக்கக் கூடியவை. இந்த ரக பீரங்கிகள், மேற்கத்திய நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டு கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதிநவீன தகவல் தொடர்பு கருவிகள், ஆளில்லா வான் வழி கண்காணிப்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றையும் பாகிஸ்தான் வாங்கி குவித்து வருகிறது. இந்தாண்டு துவக்கத்தில் சீனாவின் நோரின்கோ நிறுவனம், எஸ்எச்-15 ரக ஹோவிட்சர் பீரங்கிகளின் இரண்டாவது தொகுப்பை பாகிஸ்தானுக்கு சப்ளை செய்தது குறிப்பிடத்தக்கது.
The post சீன பீரங்கிகளை காஷ்மீர் எல்லையில் சோதனை செய்த பாக்., ராணுவம் appeared first on Dinakaran.