புதுடெல்லி: இரட்டை இலை மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக ஆகிய உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையில்லை என்று உத்தரவிட்டிருந்தது. மேலும் இரட்டை இலை சின்னம், அதிமுக பொதுச்செயலாளர் ஆகிய விவகாரம் குறித்து சூர்யமூர்த்தி, புகழேந்தி, கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்தரநாத் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் கொடுத்துள்ளது தற்போது வரை நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று முன்தினம் ஒரு விளக்க மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவை சார்ந்தவர் கிடையாது. மேலும் தேர்தலில் வேறு கட்சி சார்பாக அதிமுக வேட்பாளரையே எதிர்த்து போட்டியிட்டவர் என்பதால்,அவரது கோரிக்கை மனுவை நிராகரிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். அதேபோன்று உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேற்கண்ட விவகாரத்தில் வழக்கறிஞர் சூர்யமூர்த்தி தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், “ஆரம்பம் முதலே அதிமுக தொண்டர் அணியில் இருந்து நான் செயல்பட்டு வருகிறேன். உறுப்பினராகவும் உள்ளேன். அதனை அடிப்படையாக கொண்டுதான் கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டேன். இதில் நான் அதிமுக கட்சியே கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும். அதனை ஆணையம் நிராகரிக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னம், அதிமுக பொதுச்செயலாளர் ஆகிய விவகாரங்கள் தொடர்பான சிவில் வழக்கு தற்போது வரை கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே அதில் இறுதி உத்தரவு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post சிவில் வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த எடப்பாடிக்கு தடை விதிக்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையத்தில் கூடுதல் மனு appeared first on Dinakaran.