சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு: பக்தர்கள் திரண்டனர்

9 hours ago 2

தர்மபுரி, ஏப்.11: பங்குனி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை மல்லிகார்ஜூன சுவாமி கோயிலில், நேற்று மாலை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோயிலில் நந்திகேஸ்வரருக்கு விபூதி, சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் சன்னதி, தர்மபுரி ஆத்துமேடு சாலையில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில், தர்மபுரி கடைவீதி மருதவாணேஸ்வரர் கோயில், அன்னசாகரம் சாலையில் உள்ள சித்திலிங்கேஸ்வரர் கோயில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள அருளீஸ்வரர் கோயில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோயில், சவுளுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பையர்நத்தம் கிராமத்தில் மயிலை மலை பாலமுருகன் கோயில் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள அமிர்தேஸ்வரர் கோயிலில், நந்தி பெருமானுக்கு பால் மற்றும் பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர், அபிஷேக பொடி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பையர்நத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த பூலாப்பட்டி ஆற்றங்கரையில், அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், பெரியாம்பட்டி பசுபதீஸ்வரர் கோயில், அனுமந்தபுரம் சிவன் கோயில் உட்பட பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு: பக்தர்கள் திரண்டனர் appeared first on Dinakaran.

Read Entire Article