கரைகள் சீரமைப்பு, கழிவுநீர் தடுப்புடன் சூழல் பூங்கா அமைப்பு: ரூ.140 கோடியில் அழகுபடுத்தப்படும் வைகை: மாநகராட்சி சார்பில் திட்டப்பணிகள் ‘விறுவிறு’

9 hours ago 3

மதுரை: வரலாற்று மேன்மையுடன், ஆன்மிகச் சிறப்புக்குரிய வைகை ஆற்றை, மதுரை நகருக்குள் ரூ.140 கோடியில் கரைகளை சீரமைத்து, கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, பொழுது போக்கிற்கான மேலும் ஒரு சுற்றுச்சூழல் பூங்காவையும் மதுரை மக்களுக்காக மாநகராட்சி நிர்வாகம் அமைக்கிறது. சிலப்பதிகாரம் ‘பொய்யாக் குலக்கொடி’ என வைகை நதியை பெருமையோடு பேசுகிறது. பழம் பாடல்களும், திருவிளையாடல் உள்ளிட்ட புராணங்களும் இந்த நதியை பாட மறக்கவில்லை.

தேனி மாவட்டம் வருசநாடு மலைத்தொடரில் பிறந்து மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் வழியாக 240 கி.மீட்டர் தூரம் கடந்து ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இந்நதி முடிகிறது. இங்கிருந்து வழிகிற உபரிநீரே ஆற்றங்கரை எனும் இடத்தில் வங்காள விரிகுடா கடலைச் சேர்கிறது. எனவே நேரடியாக கடலில் கலக்காத நதி என்ற பெருமையை வைகை பெறுகிறது. இந்த வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயத்திற்கு அடிப்படையாக இருப்பதுடன், பொதுமக்களின் குடிநீர் தேவையும் தீர்க்கிறது.

கோடையில் வறண்டு போகும் வைகையுடன் பெரியாறு இணைக்கப்பட்டதில் ‘நதிகள் இணைப்பு திட்ட முன்னோடி’ என்ற பெருமையும் வைகை நதிக்குண்டு. பலதரப்பட்ட சிறப்பு கொண்ட இந்நதி நகருக்குள் ஆக்கிரமிப்புகள், சாக்கடை கழிவுகள் கலப்பதால் சுகாதாரச் சீர்கேடுகள், சமூக விரோதிகள் கூடாரமென மாறிக் கிடந்தது. தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகள் வைகைக்கு வளம் சேர்த்து வருகிறது. நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள், மதுரை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஆற்றுக்குள் இருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டபங்களும் சீரமைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக மதுரை நகருக்குள் வைகை ஆற்றை முழுமையாக மேம்படுத்தும் சிறப்பு திட்டத்தை மாநகராட்சி தற்போது நிறைவேற்ற உள்ளது. சமீபத்தில் மதுரை ஐகோர்ட் கிளை வைகையாற்றை காக்கவும், மாசடைவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது இதற்கான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. வைகை ஆற்றை புதுப்பிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த டிசம்பரில் தயாரிக்கப்பட்டு, நகராட்சி நிர்வாகத்துறையிடம், மாநகராட்சி நிர்வாகம் சமர்ப்பித்தது.

இத்திட்டத்தின் கீழ் ஆற்றின் கரைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக வைகை ஆற்றுக்குள் கண்டறியப்பட்டுள்ள 38 இடங்களில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டு, மதுரைக்குள் வைகை ஆற்றின் நுழைவுப்பகுதியாக கோச்சடையில் மிகப்பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படுகிறது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘மாநில பட்ஜெட்டில் வைகை ஆற்றுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பணிகள் துவக்கி, வைகையாற்றில் கழிவுநீர் கலப்பது முழுமையாக தடுக்கப்படும். இதற்கு முத்தாய்ப்பாக மேம்பாலம் கட்டுவதற்கென இடித்த பந்தல்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.ஒரு கோடியில் மீண்டும் கட்டுமானம் காண்கிறது. வைகையாற்றுக் கரையில் மேலும் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, வைகையாற்றுக்குள் ஒரு சொட்டு கழிவுநீரும் கலக்காத நிலை நிச்சயம் உருவாகும்.

இதைத்தொடர்ந்து அழகிய வைகை ஆற்றின் கரையோரத்தில் விளக்குகள் அமைப்பது, மரங்கள் நடுவது, அழகான இருக்கைகள், நிழல் தரும் கூரைகள், பார்வையிட மேடைகள், செல்பி பாயின்ட்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அழகுபடுத்துவது முதல், கோச்சடையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது வரையிலான பணிகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும். கோச்சடையில் ஏற்கனவே உள்ள சிறிய பூங்காவில் மழைநீர் சேகரிக்கும் வகையிலான சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பூங்காவாக வடிவமைக்கப்பட இருக்கிறது’ என்றனர்.

The post கரைகள் சீரமைப்பு, கழிவுநீர் தடுப்புடன் சூழல் பூங்கா அமைப்பு: ரூ.140 கோடியில் அழகுபடுத்தப்படும் வைகை: மாநகராட்சி சார்பில் திட்டப்பணிகள் ‘விறுவிறு’ appeared first on Dinakaran.

Read Entire Article