
சென்னை,
நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், தனது மனைவி அபிராமியுடன் சேர்ந்து 'ஜகஜால கில்லாடி' என்ற திரைப்படம் தயாரிக்க, ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம ரூ. 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் கடன் வாங்கினார். ஆனால் உரிய நேரத்தில் கடன்தொகை திருப்பி செலுத்தப்படாததால் சென்னை ஐகோர்ட்டில் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
ஐகோர்ட்டு உத்தரவின்படி நடந்த சமரச பேச்சு வார்த்தையில், கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ. 9 கோடியை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த தொகையை கொடுக்காததால், நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால், இந்த வீடு தன் பெயரில் உள்ளது என்று பிரபு மனு தாக்கல் செய்ததால், ஜப்தி உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டு விட்டதாக கூறி, வழக்கை திரும்ப பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.