
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ் குமார். தமிழில் ரஜினியின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஆண்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சில மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பினார். அதையடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார். குறிப்பாக, கேம் சேஞ்சர் படத்தை அடுத்து ராம்சரண் நடிக்கும் 16 வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரடி தமிழ்ப் படமொன்றில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டதைத் தொடர்ந்து தனது 131-வது படத்தின் படப்பிடிப்பில் சிவராஜ்குமார் இணைந்துள்ளார்.
பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அதன்படி, '45' என்ற படத்தை இவர் இயக்கி வருகிறார். இதில், சிவராஜ்குமார், உபேந்திரா மற்றும் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் கன்னட சினிமாவின் அடுத்த பெரிய வெற்றிதிரைப்படமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில் உருவாகும் இப்படம் ஒரு ஆக்சன் காமெடி கதைக்களம் என்று கூறப்படுகிறது. '45' படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.