இது எந்தச் செயல் என்பதைப் பொறுத்தது. உதாரணத்திற்கு ராணுவ வீரர்கள், காவல்துறையினர் போன்றோருக்கு சிவப்பு நிறமும், படிக்கின்ற மாணவர்களுக்கு பச்சை நிறமும், மங்களகரமான செயல்களைச் செய்யும்போது மஞ்சள் நிறமும், உழைக்கும் வர்க்கத்தினருக்கு நீல நிறமும், ஆசிரியர் மற்றும் நீதித்துறையினருக்கு வெள்ளை நிறமும் ஊக்கம் தரும். ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு விதமான குணம் என்பது உண்டு. அதன் அடிப்படையில்தான் அந்த நிறங்களுக்கு ஏற்ற செயல்களும் தீர்மானிக்கப்படுகிறது.
?கைராசி, ஜாதகம், ஓலைச்சுவடி இவற்றில் 100 சதவீதம் சரியான ஜோதிட பலன்கள் எதில் உள்ளது? ஏன்?
– ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.
சந்தேகமே இல்லாமல் ஜனன ஜாதகம் என்பதுதான் மற்ற இரண்டையும்விட பலன்களை அறிந்துகொள்வதில் பெரிதும் துணை புரிகிறது. காரணம், நவகிரஹங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் ஜாதகம் என்பது பலனைச் சொல்கிறது. கிரஹங்களின் சஞ்சாரம் உண்மை என்பதை நாம் பௌர்ணமி, அமாவாசை மற்றும் கிரஹணங்கள் போன்ற கண்ணிற்குத் தெரிந்த நிகழ்வுகளின் மூலம் உணர்ந்துகொள்கிறோம். ஓலைச்சுவடி என்பதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. கைரேகையைக் கொண்டு பொதுவான பலன்களை அறிந்துகொள்வது கடினம். ஆக, நவகிரஹங்களின் சுழற்சியைக் கொண்டு பலன் உரைக்கப்படும் ஜாதக முறையே மற்ற இரண்டையும்விட பலன் அறிவதில் பெரிதும் துணை நிற்கிறது. அதே நேரத்தில், 100 சதவீதம் துல்லியமான பலனை எந்த முறையிலும் அறிந்து கொள்ள இயலாது என்பதே உண்மை. அவ்வாறு 100 சதவீதம் துல்லியமான பலனை அறிந்துகொள்ள இயலும் என்றால், இறைசக்தி என்பதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும். ஆண்டவன் மனது வைத்தால் எதுவும் மாறும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
?பஞ்சாங்கத்தில் விஷமாசம் என்று போட்டு இருக்கிறது? அதென்ன விஷமாசம்?
– மகேஷ்பாபு, சென்னை.
ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பௌர்ணமியும், ஒவ்வொரு அமாவாசையும் வரும். ஆனால், அபூர்வமாக ஏதாவது ஒரு மாதத்தில் பௌர்ணமி வராது. அல்லது அமாவாசை வராது. முதல் மாதத்தின் கடைசி தேதியிலும், அடுத்த மாதத்தின் முதல் தேதியிலும் வந்துவிடும். அந்த குறிப்பிட்ட மாதத்தில் வராத சூழ்நிலை இருக்கும். அப்படி இருந்தால் அந்த மாசம் விஷமாசம் என்பார்கள். பௌர்ணமியோ, அமாவாசையோ இல்லாத மாசம் விஷமாசம். அதைப் போலவே சில மாதத்தில் இரண்டு பௌர்ணமி அல்லது இரண்டு அமாவாசை வரும் உதாரணமாக மாத ஆரம்பத்தில் பௌர்ணமி வந்து 31,32 தேதியுள்ள மாதமாக இருந்தால், மாதக் கடைசியிலும் அமாவாசை வந்துவிடும். அந்த மாதத்தை மல மாதம் என்பார்கள். இப்படி வருகின்ற மாதம், சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற மாதம் அல்ல.
?ஒளஷதகிரி என்று திருத்தலம் இருக்கிறதா?
– விஷ்ணுவர்தன், திருநெல்வேலி.
இருக்கிறது. கடலூருக்கு அருகில் திருவயித்திரபுரம் என்று ஒரு திருத்தலம். அங்கே மருந்துமலை என்று ஒரு மலை இருக்கிறது. அந்த மலைக்கு மேலே ஹயக்ரீவர் இருக்கிறார் வேதாந்த தேசிகர் இந்தத் தலத்தில் 40 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் கட்டிய திருமாளிகை, கிணறு எல்லாம் இன்னும் இருக்கிறது. மாணவர்கள் தங்கள் கல்வி வளர்ச்சிக்கு இங்குள்ள ஹயக்ரீவரை வணங்கி நலம் பெறுகிறார்கள்.
?இன்றைய சமூகம் எதை நோக்கி நகர்கிறது?
– பரிமளா, ஸ்ரீரங்கம்.
சொல்வதற்கு பயமாக இருக்கிறது. ஆனாலும்கூட நடைமுறையில் எதிர்கால சமுதாயம் மிக மிக இக்கட்டான, எளிதில் நீக்கிக் கொள்ள முடியாத அழிவை நோக்கி நகருகிறதோ என்று தோன்று கிறது. அதற்கு தெரிந்தோ தெரியாமலோ நாமும் ஒரு காரணம் ஆகிவிடுகின்றோம். வாழ்வதற்கு பணம் தேவை என்பதை தாண்டி, பணம் மட்டுமே வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்து விட்டோம். நாம் வந்தது மட்டுமல்லாமல் நம்முடைய குழந்தைகளையும் அதை நோக்கியே தொடர் ஓட்டம் ஓடும் ஒரு சூழ்நிலை உருவாக்கிவிட்டோம். இன்றைக்குப் பிறக்கும் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள், நல்லவனாக இரு, நியாயமாக இரு, கருணையோடு இரு, தெய்வ பக்தியோடு இரு என்று சொல்லி வளப்பதாகத் தெரியவில்லை.
மாறாக, எப்படியாவது படி, எதையாவது படி, நிறைய சம்பாதி என்று சொல்லி வளர்க்கின்றார்கள். ஒருவனின் அறிவும் ஆற்றலும், திறமையும், அவனுக்குத் தரப்படும் கௌரவமும், அவன் எவ்வளவு நல்லவன் என்பதைவிட எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கும் அவலத்தை நாம் கூட்டாக செய்து வருகிறோம். உலகப் பேரழிவுகளிலே இதுதான் மிகப் பெரிய பேரழிவு. ஆனால், அதை நோக்கித்தான் நடந்து கொண்டிருக்கின்றோம். இதை சற்று நிதானத்தோடு சிந்தித்து மாற்றிக்கொண்டு நடக்காவிட்டால், நம்முடைய பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகளின் எதிர்காலம் சவாலுக்கு உரியதாகத்தான் இருக்கும்.
?நாம் கோயிலுக்குப் போய் சாமியைக் கும்பிடுகிறோம் அப்படி இருக்கும் பொழுது ஏன் சாமியை அலங்காரம் செய்து வீதி ஊர்வலமாக வருகின்றார்கள்?
– குமார், தஞ்சாவூர்.
நல்ல கேள்விதான். கோயிலுக்கு எல்லோராலும் போக முடிவதில்லை. வயதானவர்கள், நோயாளிகள் இப்படி பலரும் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்க முடியாத நிலை இருக்கிறது. ஆகையினால், இறைவன் தன்னுடைய பக்தர்களைப் பார்ப்பதற்கு ஒரு நாள் வீதி வலம் வருகின்றான். ஆகம விதிகள் சாஸ்திர விதிகள் என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டாலும், அவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனிதனின் நன்மையை உத்தேசித்தே வகுக்கப்பட்டிருக்கின்றன.
?நம் மனது அமைதி இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
– ராமு, சிவங்கை.
நுட்பமாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், மனிதர்களுக்கு இருக்கக் கூடிய தன்முனைப்பும் தற்பெருமையும்தான் அமைதி இல்லாத வாழ்வுக்குக் காரணமாக அமைகின்றன. தற்பெருமை மறைந்தால் மனிதர்களுக்கு இடையே உள்ள வெறுப்பு மாறும். வெறுப்பு அகன்றால் வன்முறை எண்ணங்கள் நம்மைவிட்டு அகலும். வன்முறை எண்ணங்கள் நம்மை விட்டு மறைந்தால், அமைதி நம் மனதில் பிறக்கும். இன்னும் ஒரு விஷயமும் இதில் உண்டு. நாம் நம் வாழ்க்கையை வாழ்ந்தால் மனதில் அமைதி இருக்கும். பிறர் வாழ்க்கையை வாழ நினைத்தால் என்றும் அமைதி இருக்காது.
The post சிவப்பு வர்ணம் ஊக்கம் தருமா? appeared first on Dinakaran.