மொடக்குறிச்சி, ஜூலை 1: சிவகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கோவேறு கழுதை பால் விற்பனை நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதிகளில் அவ்வப்போது நாட்டு கழுதை பால் நடந்துள்ளது. தற்போது திருச்சியை சேர்ந்த சில வாலிபர்கள் 10 கோவேறு கழுதைகளை குட்டிகளுடன் இந்த பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். காலை, மாலை நேரங்களில் தெருத்தெருவாக கழுதைகளை ஓட்டிவந்து, பால் கறந்து விற்பனை செய்கின்றனர். 100 மில்லி அளவு கோவேறு கழுதை பால் 800 ரூபாய்கு விற்கின்றனர்.
இது குறித்து கழுதை பால் விற்பனை செய்பவர்கள் கூறியதாவது: கோவேறு கழுதைகள் தமிழகத்தில் கிடைப்பதில்லை. வட மாநிலங்களில் இருந்து வாங்கி வருகிறோம். இதற்கென தனியாக புரோக்கர்கள் உள்ளனர். நல்ல ஜாதி கழுதையை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை, விலை கொடுத்து வாங்குகிறோம்.
ஒரு கழுதையில் நாளொன்றுக்கு, 250 மில்லி அளவு மட்டுமே பால் கறக்க முடியும். நாட்டுக் கழுதைப் பாலைவிட, கோவேறு கழுதை பால் கூடுதலான மருத்துவ குணங்களை உடையது. குழந்தைகளுக்கு இரண்டு வேளை கழுதைப்பால் கொடுப்பதால், மப்பு, மாந்தம், இளைப்பு, காமாலை முதலியவை வராது. கோவேறு கழுதைகளை கவனத்துடன் பராமரிக்க வேண்டும். புல், புண்ணாக்கு, தவிடு ஆகியவற்றை தீவனமாக தருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post சிவகிரி பகுதியில் கோவேறு கழுதை பால் அமோக விற்பனை appeared first on Dinakaran.