சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 3 பேர் கைது: பல்லடம் இரட்டை கொலையிலும் தொடர்பு?

4 hours ago 1

ஈரோடு: சிவகிரியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த வயதான தம்பதியை படுகொலை செய்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் மரம் ஏறும் தொழிலாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல்லடம் இரட்டை கொலையிலும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுவதால் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம் (65).

இவர்களுக்கு திருமணமான மகன், மகள் உள்ளனர். ராமசாமி, பாக்கியம் மட்டும் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து விவசாயம் செய்து வந்தனர். கடந்த 1ம் தேதி ராமசாமியையும், பாக்கியமும் வீட்டில் மர்ம நபர்களால் கொடூரமாக அடித்துக்கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தனர். பாக்கியம் அணிந்திருந்த 11 பவுன் நகை மற்றும் வீட்டின் பீரோவில் வைத்திருந்த பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. கொலையாளிகளை பிடிக்க ஈரோடு எஸ்பி சுஜாதா தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதேபோல திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைக்கவுண்டன்பாளயைத்தை சேர்ந்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமேலு (75), அவரது மகன் செந்தில்குமார் (46) ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி அவர்களது தோட்டத்து வீட்டில் மர்மநபர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த கொலை சம்பவமும், சிவகிரி இரட்டை கொலை சம்பவமும் ஒன்றுபோல நடந்திருப்பதால், திருப்பூர் மாவட்ட போலீசாரும் சிவகிரி கொலை வழக்கு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம், சிவகிரி பகுதியில் போலீசார் வாகன ரோந்து மேற்கொண்டபோது, அவ்வழியாக சந்தேகப்படும்படியாக 3 பேர் வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

இதையடுத்து அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர்கள் ஈரோடு மாவட்டம் அறச்சலூர் ராம்நகர் ஜல்லிமேடு மேற்கு தலவுமலையை சேர்ந்த ஆச்சியப்பன் (48), அறச்சலூர் மேற்கு வீதியை சேர்ந்த மாதேஸ்வரன் (53), அறச்சலூர் நடுப்பாளையம் மெயின் வீதியை சேர்ந்த ரமேஷ் (52) ஆகியோர் என்பதும், 3 பேரும் தேங்காய் பறிக்கும் மரம் ஏறும் தொழிலாளிகள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சிவகிரி விளக்கேத்தியில் ராமசாமி, பாக்கியத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மரம் ஏறும் தொழிலாளிகளான அறச்சலூரை சேர்ந்த ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகிய 3 பேரும் சிவகிரி மேகரையான் தோட்டத்தில் ராமசாமி, பாக்கியம் தம்பதி வீட்டில் தென்னை மரம் ஏற சென்றனர். அப்போது, அவர்கள் தனியாக இருப்பதை அறிந்து, அவர்கள் திட்டமிட்டு மண்வெட்டியின் கைப்பிடி உருளையால் ராமசாமி, பாக்கியத்தை தலையில் தாக்கி கொலை செய்து, நகை பணத்தை திருடி சென்றுள்ளனர்.

கொலை சம்பவம் நடந்தபோது இவர்களது செல்போன் எண் அந்த பகுதியில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இதேபோல தனியாக தோட்டத்து வீட்டில் வசிக்கும் வயதான தம்பதியினரை கொலை செய்து, நகை, பணத்தை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சிவகிரி இரட்டை கொலை வழக்கு மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் நடந்த கொலையுடன் கூடிய கொள்ளை சம்பவத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.

மேலும் விசாரணை நடந்து வருகிறது. முழுமையான விசாரணைக்கு பிறகே திருப்பூர் மாவட்டம் பல்லடம் 3 பேர் கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்பது தெரியவரும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கடத்தூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், டிஐஜி சசிமோகன், எஸ்பி சுஜாதா ஆகியோர்விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 3 பேர் கைது: பல்லடம் இரட்டை கொலையிலும் தொடர்பு? appeared first on Dinakaran.

Read Entire Article