சிவகாசி: சிவகாசியில் பட்டாசு சீசன் முடிந்து விட்ட நிலையில் 2025ம் ஆண்டிற்கான காலண்டர் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு விலை உயர்வு இருக்காது என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சகத்தொழில் முக்கியத்துவம் பிடிக்கிறது. தீபாவளி பட்டாசு சீசன் முடிந்த நிலையில் காலண்டர் தயாரிப்பு பணியில் சிவகாசி தற்போது பிசியாக உள்ளது. 2025ம் ஆண்டிற்கான தினசரி காலண்டர், மாத காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 800க்கும் மேற்பட்ட அச்சகங்களில் காலண்டர் தயாரிப்பு பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
காலண்டர் தயாரிப்புப் பணி ஆண்டு முழுவதும் நடைபெற்று வந்தாலும் ஜூலை முதல் டிசம்பர் வரை விறுவிறுப்பாக நடைபெறும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிவகாசி காலண்டர் கொண்டு செல்லப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் 200 வகையான காலண்டர்கள் தயார் செய்யப்படுகின்றது. சிவகாசியில் காலண்டர் தயாரிப்பு மூலம் ஆண்டுக்கு ரூ.200 கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று 2025ம் ஆண்டு காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கியது. தயாரிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு வெளிமாநில ஆர்டர் அனுப்பும் பணி நடந்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக பெரும் சிரமத்திற்கு இடையில் காலண்டரை தயாரித்து ஆர்டர் கொடுத்தவர்களுக்கு அனுப்பி வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காலண்டர் தயாரிப்பாளர் ரிஷி சதீஷ்குமார் கூறுகையில், ‘‘சிவகாசியில் தினசரி, மாத காலண்டர்கள் ஒவ்வொரு ஆண்டும் புதுமையான வடிவமைப்புகளில், புதுப்புது ரகங்களில் தயாரிக்கப்படுவதால் தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. காலண்டர் தயாரிப்புக்கு அட்டை, ஆர்ட் பேப்பர் ஆகியவை முக்கிய மூலப்பொருளாக உள்ளன.
இந்த மூலப்பொருட்களின் விலை 2022ல் கடுமையாக உயர்ந்தது. அப்போது காலண்டர் விலை 30 சதவீதம் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு காலண்டர் விலை 5 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. நடப்பாண்டு மூலப்பொருட்களின் விலை உயர்வு இல்லாததால் கடந்த ஆண்டிற்கு கொடுத்த அதே விலையில்தான் விற்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு காலண்டர் விற்பனை நன்றாக இருக்கும். ஒரு சில காலண்டர் கம்பெனிகளில் மின் கட்டணம் காரணமாக 5 சதவீதம் விலையை உயர்த்தி உள்ளனர்’’ என்றார்.
The post சிவகாசியில் பட்டாசு சீசன் முடிந்தது 2025ம் ஆண்டு காலண்டர் தயாரிப்பு விறுவிறுப்பு: விலை ஏற்றம் இருக்காது என உற்பத்தியாளர்கள் தகவல் appeared first on Dinakaran.