சிவகளை தொல்லியல் களத்தின் பழமை: வெளிநாட்டினர் பார்த்து வியப்பு

3 months ago 24

ஏரல்: சிவகளை தொல்லியல் களத்தை ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பார்த்து வியந்தனர். ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 25 சுற்றுலா பயணிகள், ராஜா டேனியல், டேவிட், ரோசி ஆகியோர் தலைமையில் இந்தியாவிற்கு வந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்த இவர்கள், கடந்த 28ம் தேதி தூத்துக்குடி வந்தனர். மறுநாள் காலையில் பிரசித்திப் பெற்ற பனிமய மாதா பேராலயத்தை பார்வையிட்ட அவர்கள், சாயர்புரம் சர்ச்சையும் பார்த்தனர். தொடர்ந்து இங்குள்ள தோட்டங்களை பார்வையிட்டு பண்ணைவிளை சென்ற வெளிநாட்டு குழுவினரை பண்ணைவிளை பங்களாவை சேர்ந்த முத்துநகர் இயற்கை பாதுகாப்பு சங்க பறவை ஆர்வலர் தாமஸ் மதிபாலன் வரவேற்று, பெருங்குளம் குளத்திற்கு ஆண்டுதோறும் வரும் மங்கோலியா, சைபீரியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வரும் உள்ளான் பறவை, வாத்து இன பறவைகள் உள்ளிட்ட அரியவகை பறவைகள் பற்றி விளக்கினார்.

இதனை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். பின்னர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிவகளை தொல்லியல் களத்தை பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகளை சிவகளை தொல்லியல் கழக ஆய்வாளரான ஆசிரியர் மாணிக்கம் வரவேற்று சிவகளையின் முக்கியத்துவம், செழுமை, பொருநை நதியின் போக்கு, சிவகளையில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல் பொருட்கள், உலோகக்கால எச்சங்களும், அவற்றின் பயன்பாடுகளும் குறித்து விளக்கம் அளித்தார். சுமார் 3200 ஆண்டுகள் பழமையான இப்பகுதியின் சிறப்புகளை அறிந்து அவர்கள் வியந்தனர். அப்போது தொல்லியல் களத்தின் பாதுகாவலர் சிவகளை பரும்பு நடராஜன் உடனிருந்தார். தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குழுவினர், சென்னை புறப்பட்டு சென்றனர்.

முதல்வருக்கு நன்றி
சிவகளை ஆசிரியர் மாணிக்கம் கூறுகையில், கடந்த வாரம் அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள மக்களை சந்தித்து பேசும் போது வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வரும்போது சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை மற்றும் கீழடி போன்ற தொல்லியல் களத்ைத பார்வையிட வாருங்கள் என அழைப்பு விடுத்திருந்தார். இதன் அடிப்படையில் தற்போது வெளிநாட்டினர் சிவகளை தொல்லியல் களத்தினையும் வந்து பார்த்துச் சென்றுள்ளனர். இதற்காக முதல்வருக்கு தொல்லியல் கழக ஆர்வலர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

The post சிவகளை தொல்லியல் களத்தின் பழமை: வெளிநாட்டினர் பார்த்து வியப்பு appeared first on Dinakaran.

Read Entire Article