சிவகங்கை, ஜன. 22: சிவகங்கை மாவட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 பெறும் புதுமைப்பெண் திட்டத்தில் 7,181 மாணவிகள் பயன் பெறுகின்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலம் அனைத்து வளமும் பெற்ற மாநிலமாக கருதப்படும் என்ற அடிப்படையில், எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அத்திட்டங்கள் மட்டுமின்றி, புதிதாகவும், தொலைநோக்கு பார்வையுடனும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் (மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதி திட்டம்) முதற்கட்டமாக 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2023ம் ஆண்டு இத்திட்டம் இரண்டாம் கட்டமாக விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இரண்டு கட்டங்களாக தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இத்திட்டம் மூலம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து மேற்படிப்பில் சேர்ந்த 3 லட்சத்து 48 ஆயிரம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மொத்தம் 4,500 மாணவிகளுக்கு ரூ.1000அவர்கள் வழங்கப்படுகிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் தற்போது மொத்தம் 7,181 மாணவிகள் பயன்பெறுகின்றனர். காளையார்கோவில் தனியார் கல்லூரி மாணவி கூறியதாவது: இத்திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1000, எனது குடும்ப பொருளாதர சூழ்நிலையில் எனது கல்வி செலவிற்கும், அன்றாட தேவைகளுக்கும் பெரிய உதவியாக உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன், என்றார்.
The post சிவகங்கை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 7 ஆயிரத்து 181 மாணவிகள் பயன்: முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.