மதுரை: சிலை கடத்தல் வழக்கில் சாட்சிகளை மிரட்டி வருவதால் ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலின் முன்ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியை, தப்பிக்க வைக்க முயன்றதாக சிலை கடத்தல் பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. காதர்பாட்ஷா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பொன் மாணிக்கவேல் மீதான புகார் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதன்படி பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, மதுரை மாவட்ட கூடுதல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.