சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு வயிற்றில் அடிக்கும் பாஜ அரசு: குடும்பத்தலைவிகள் கொந்தளிப்பு

2 weeks ago 7

சேலம்: நாடு முழுவதும் இன்று காலை முதல் காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. சென்னையில் ரூ.868.50, சேலத்தில் ரூ.886.50 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒன்றிய அரசு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்தி நேற்று அறிவித்தது. ஆனால், இந்த வரி உயர்வினால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த மாட்டோம் என அறிவித்தது. அதேவேளையில் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ காஸ் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்துவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு ஏழை, எளிய, நடுத்தர மக்களின் தலையில் பெரும் இடியாக வந்து விழுந்தது.

நேற்று அறிவித்தபடியே இன்று அதிகாலை முதல் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன்படி, இன்று முதல் காஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.818.50ல் இருந்து 50 ரூபாய் உயர்ந்து ரூ.868.50 ஆக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காஸ் சிலிண்டர் விலை உயர்வால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். சிலிண்டர் விலை உயர்வு பற்றி குடும்பத்தலைவிகள் கூறியதாவது: தேர்தல் வந்தால் மட்டும் சிலிண்டர் விலையை குறைப்பேன் என்ற போக்கில் பாஜ அரசு இருக்கிறது.

தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சிக்கு வந்தநிலையில், 50 ரூபாயை ஏற்றிவிட்டனர். சிலிண்டர் விலை ரூ.868.50 என்றால், எங்களிடம் சிலிண்டர் கொண்டு வந்து போடும் நபர் கூடுதலாக ரூ.50 முதல் 100 வரை வசூலிக்கிறார். இதனால், 950 ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டியிருக்கிறது. மானியமும் தராமல் எங்கள் வயிற்றில் பாஜ அரசு அடிக்கிறது என்றனர்.

The post சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு வயிற்றில் அடிக்கும் பாஜ அரசு: குடும்பத்தலைவிகள் கொந்தளிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article