தமிழர்களின் தனித்துவப் பண்டிகை கரும்பு இல்லாமல் இனிக்குமா? அதற்காகத்தான் செங்கரும்பு சாகுபடி செய்யும் விவசாயியைத் தேடி அரியலூர் மாவட்டத்திற்குப் பயணமானோம். அரியலூர் மாவட்டம் தஞ்சாவூரைப் போல பல பழைய வரலாற்றுச் சுவடுகளைச் சுமந்திருக்கும் மாவட்டம். தஞ்சாவூர் பெரிய கோயிலைப் போலவே இங்குள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயிலும் அழகும், கம்பீரமும் கொண்டது. இத்தகைய கங்கைகொண்ட சோழபுரத்திற்கும், ஜெயங்கொண்டத்திற்கும் மிக அருகில் அமைந்திருக்கும் சிலால் கிராமத்தில் ஒரு செங்கரும்பு விவசாயியைச் சந்திக்க முடிந்தது. பெயர் திருஞானம், பல ஆண்டுகள் விவசாயத்தில் அனுபவம் கொண்டவர். செடிமுருங்கை, நிலக்கடலை, மக்காச்சோளம் என பல பயிர்களைச் சுழற்சி முறையில் சாகுபடி செய்யும் இவர் பொங்கல் பண்டிகையைக் கருத்தில் கொண்டு 25 சென்ட் அல்லது 30 சென்ட் நிலத்தில் செங்கரும்பைப் பயிரிடுவார். அதில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் வருமானம் பார்த்து விடுவார். ஏன் இப்படி குறைந்த நிலத்தில் கரும்பு சாகுபடி செய்கிறார்? இதை எப்படி விற்பனை செய்கிறார்? என பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“எங்களுக்குச் சொந்தமாக 4ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் கடந்த 10 வருடமாக செங்கரும்பைச் சாகுபடி செய்கிறோம். அதிகபட்சமாக 100 குழியில் அதாவது 33 சென்ட் நிலத்தில் மட்டுமே செங்கரும்பைப் பயிரிடுவோம். அதற்கு மேல் அதிக பரப்பில் பயிரிட்டால் விற்பனை செய்ய சிரமப்பட வேண்டியிருக்கும். பொங்கல் முடிந்தால் இதை விற்பனை செய்வது கடினம். இதனால் இதை கண்ட நேரத்தில் பயிரிட முடியாது. அதேபோல ஒருமுறை ஒரு இடத்தில் கரும்பைப் பயிரிட்டால் அடுத்த முறை வேறொரு இடத்தில் பயிரிட வேண்டும். செங்கரும்பு நிலத்தின் சத்தை ஈர்த்துக்கொள்ளும். எனவே அந்த இடத்தில் செய்யக்கூடாது’’ என சில டிப்ஸ்களைக் கொடுத்த திருஞானத்திடம் செங்கரும்பின் சாகுபடி விளக்கங்கள் குறித்து கேட்டோம். “செங்கரும்பைப் பொதுவாக சித்திரை மாதத்தில்தான் பயிரிடுவோம். அப்போதுதான் தை மாதத்தில் அறுவடைக்கு வரும். சித்திரை தொடக்கத்தில் கொக்கி கலப்பை கொண்டு 2 சால் ஏர் ஓட்டுவோம். பின்பு ரொட்டோ வேட்டர் கொண்டு 2 சால் ஓட்டுவோம். அதன்பிறகு 5 கலப்பை கொண்டு நன்றாக உழுது பார் எடுப்போம். கடைசி உழவின்போது ஒரு டிப்பர் சாண எருவோடு 15 கிலோ டிஏபியை போட்டு, பாசனம் செய்வோம். இப்போது நாங்கள் 30 சென்ட் நிலத்தில் கரும்பு போட்டிருக்கிறோம். அதற்கு இந்த அளவு உரம் போதுமானது.
உழவுக்குப் பிறகு 5 அடிக்கு ஒரு பார் என அமைப்போம். பார்களின் இடையே குழியில் முக்கால் அடிக்கு ஒன்று என விதைக்கரணைகளை நடுவோம். விதைக்கரணையில் வளமாக வரும் இரண்டு, மூன்று முளைப்புகளை (தூர்கள்) மட்டும் விட்டுவிட்டு மற்ற முளைப்புகளை அகற்றிவிடுவோம். முளைப்பு நன்றாக இருந்தால் 4 முளைப்புகளைக் கூட விடலாம். அவை வளர்ந்து திரட்சியான கரும்புகளாக மாறும். கரணைகளை நட்ட பிறகு பார்களில் உள்ள மண்ணை கரணைகள் உள்ள வரிசையில் நிரப்பிவிடுவோம். இப்போது கரணை வயல் மேடாக இருக்கும். கரும்பில் தோகைகளை முறையாக கழித்துவிடுவது முக்கியம். 3வது மாதத்தில் முதல்தோகை கழிப்பை மேற்கொள்ளுவோம். அப்போது கரும்பு 1 அடி உயரத்திற்கு வளர்ந்திருக்கும். இந்த சமயத்தில் 25 கிலோ சூப்பர், 10 கிலோ பொட்டாஷ், 5 கிலோ சத்துக் குருணை ஆகியவற்றைக் கலந்து கரும்பின் அடியில் போடுவோம். இந்த உரங்களின் மீது 3 அங்குலம் அளவுக்கு மண் நிரப்பி பாசனம் செய்வோம். பொட்டாசும், சூப்பரும் கரும்பின் வேர்ப்பகுதியை பலமாக்கும். பாக்டம்பாஸ் தழைச்சத்தை அதிகரித்து தோகை நன்றாக வளர ஊக்குவிக்கும். 15 நாளுக்கு ஒருமுறை தோகைகளை கழித்து வர வேண்டும். 2 அல்லது 3 கணுக்களை விட்டு தோகைகளைக் கழிப்போம். 5 முறை தோகை கழிக்கையில் நான்கரை அடி உயரத்திற்கு கரும்பு வளர்ந்திருக்கும்.
3 சோலை கழித்த பிறகு அதாவது 5, 6வது மாதத்தில் யூரியாவையும், சத்துக்குருணையும் கலந்து சாக்கில் கட்டி வைத்து, இரவு முழுக்க வைத்திருப்போம். மறுநாள் காலையில் பாசனம் செய்து அந்த உரத்தை இடுவோம். அப்போது ஒரு காணில் (கரும்பு வரிசைக்கு இடையே பள்ளம்) இருந்து மற்ற காணுக்குத் தண்ணீர் பாயக்கூடாது. அவ்வாறு பார்த்துக்கொண்டால்தான் உரத்தின் சத்து கரும்புக்கு முறையாக கிடைக்கும். இதில் அடிக்கடி குருத்துப்பூச்சி தாக்குதல் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த மாதம் ஒருமுறை மானாகுரோட்டாபாஸ் மருந்தை டேங்குக்கு 30 மிலி கலந்து தெளிப்போம். 30 சென்ட்டுக்கு 4 டேங்க் வரை அடிப்போம். இந்த மருந்துக்கு பதிலாக பயோ பேஸ் மருந்து நல்ல தீர்வு கொடுக்கும். 9வது மாதத்தில் அதாவது ஜனவரி மாதத்தில் கரும்புகளை அறுவடை செய்வோம். நான் அப்போதிருந்தே கரும்புகளை அறுவடை செய்து சிலால், கும்பகோணம், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கடைத்தெருக்களில் விற்பனை செய்துவிடுவேன். ஒரு நாளைக்கு 30 கட்டு, 40 கட்டு என ஆட்டோவில் எடுத்துச் சென்று விற்பனை செய்துவிடுவேன். சிலர் வயலுக்கே வந்தும் கரும்பை வாங்கிச் செல்வார்கள். ஒரு கட்டு கரும்பை ரூ.250 முதல் 300 வரை விற்பனை செய்வோம். ஒரு கட்டு என்பது 10 கரும்புகள் அடங்கியது. 30 சென்ட் நிலத்தில் 400 கட்டு கரும்பு வரை மகசூல் கிடைக்கும். கட்டு ரூ.200க்கு விற்றால் கூட ரூ.80 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். இதில் பராமரிப்பு, அறுவடை, வாகனச்செலவு என அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவாகும். இதுபோக ரூ.45 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். 30 சென்ட் நிலத்தில் இது நல்ல லாபம்தான். மற்ற பயிர்களைச் செய்தால் இந்த லாபம் கிடைப்பது சிரமம்தான்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
திருஞானம்: 98439 55503.
*பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பும் இடம்பெறுகிறது. இதற்காக விவசாயிகளிடம் இருந்து செங்கரும்பு விலைக்கு வாங்கி விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் அதுபோல் செங்கரும்பு கொள்முதல் செய்வது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் செங்கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
*செங்கரும்பு வயலில் விதைக்கரணைகள் உற்பத்திக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக விதைக்கரணைகள் நடப்பட்டு, வளர்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு சாகுபடிக்கு இதில் கிடைக்கும் விதைக்கரணைகள் பயன்படுத்தப்படும். இதன்மூலம் ரூ.6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை விதைக்கரணை வாங்கும் செலவு மிச்சம் ஆகிறது.
*ஜெயங்கொண்டத்தில் இருந்து தா.பழூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் சிலால் கிராமத்தை சிலகால் என்றும் அழைக்கிறார்கள். இந்த ஊரில் செடி முருங்கை சாகுபடி மிகவும் பிரபலம். பல விவசாயிகள் செடி முருங்கை மூலம் சிறப்பான வருமானம் பார்க்கிறார்கள்.
The post சிலால் கிராமமும்… செங்கரும்பு சாகுபடியும்! appeared first on Dinakaran.