சிறை வைப்பதற்காக பணப் பரிவர்த்தனை வழக்கா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

3 months ago 9


புதுடெல்லி: ஒரு நபரை சிறையில் வைப்பதற்காக பணப் பரிவர்த்தனை வழக்கை தவறாக பயன்படுத்துவதா என்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டீஸ்கர் மாநில மதுபான முறைகேடு வழக்கில் சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அம்மாநில விசாரணை நீதிமன்றம் ரத்து செய்த பின்பும் அவரை அமலாக்கத்துறை தொடர்ந்து சிறையில் வைத்திருந்தது. மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து வழக்கில் சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை ரத்து செய்து உத்தரவிட்டது செல்லாது.

குறிப்பாக சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அனுமதியை அம்மாநில அரசிடம் பெறவில்லை என்பதால் தான் குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவை இன்னும் எழுத்துப்பூர்வமாக வெளியிடவில்லை என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ஒருவரை சிறையில் வைத்திருப்பதற்காகவே பணப்பரிவர்த்தனை சட்டத்தை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துகிறது. இது மிகவும் கண்டனத்திற்கு உரியதாகும். நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் சம்பந்தப்பட்ட நபரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் எவ்வாறு வைத்திருக்க முடியும். இது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமில்லாமல் நீதிமன்ற அவமதிப்பாகும். குறிப்பாக விசாரணைக்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அது எந்த காரணத்தின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டாலும் ரத்து தான் ஆகும்.

அப்படி இருக்கும் போது சம்மந்தப்பட்ட நபர் கடந்த ஆகஸ்ட் 2024 முதல் காவலில் இருக்கிறார் என்றால் இதெல்லாம் என்ன? இது அரசியல்சாசன விதிகளுக்கு எதிரானது என்று அமலாக்கத்துறைக்கு தெரியவில்லையா என சரமாரி கேள்வியெழுப்பினர். இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வாதங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபருக்கு உடனடியாக உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்குகிறது என்று உத்தரவிட்டனர்.

The post சிறை வைப்பதற்காக பணப் பரிவர்த்தனை வழக்கா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article