
சென்னை ,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் தற்போது 'வேட்டுவம்' என்ற புதிய படத்தை எழுதி இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார்.
இதற்கிடையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில், ரோஸி பிலிம் பெஸ்டிவல் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பா. ரஞ்சித், வசந்தா பாலன், லெனின் பாரதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். விழாவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், இந்தியாவில் திரையிட அனுமதிக்கப்படாத சந்தோஷ் படத்தை பிரசாத் லேபில் வெளியிட போலீஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெளியில் திரையிடுவோம் எனவும் அதற்காக சிறை செல்லவும் தயார் என்றும் கூறி இருக்கிறார்.
பிரிட்டிஷ் - இந்திய திரைப்பட இயக்குனர் சந்தியா சூரி இயக்கி, கடந்த ஆண்டு வெளிநாடுகளில் திரையிடப்பட்ட படம், 'சந்தோஷ்'. இந்தப் படம், இங்கிலாந்து சார்பாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது
வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை இப்படம் பேசுகிறது. படத்தில் உள்ள கருத்துகள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி பல காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் வலியுறுத்திய நிலையில், படக்குழு மறுத்தது. இதையடுத்து படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டது.