
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 162 ரன் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ராகுல் 41 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு 18.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 165 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் குருனால் பாண்ட்யா 73 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது குருனால் பாண்ட்யாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் பெங்களூரு சீனியர் வீரரான விராட் கோலி அரைசதம் (51 ரன்) அடித்தார். இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி தனது சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் ஷர்மாவின் கால்களை தொட்டு வணங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.