
தெஹ்ரான்
ஈரான் நாட்டின் பாந்தர் அப்பாஸ் நகரில் துறைமுகம் உள்ளது. இது ஈரானின் மிகப்பெரிய வர்த்தக துறைமுகம் ஆகும். இந்த துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. துறைமுகத்தில் கண்டெய்னர்கள் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது.
ஏவுகணைகளுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்களை சரிவர கையாளாததால் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அமோனியம் பெர்குளோரேட் என்ற வேதிப்பொருள் அந்த துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர்களில் சேமித்து வைக்கப்படிருந்தது. ஏவுகணைகளுக்கான எரிபொருளாக பயன்படும் இந்த வேதிப்பொருள் வெடித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை ராணுவ அமைச்சகம் மறுத்துள்ளது.
இந்நிலையில், இந்த வெடி விபத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில் நிலையில் பலி எண்ணிக்கை தற்போது மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி இந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து ஈரான் அதிகாரிகள் இதுவரை எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.