சிறுமுகையில் சூறாவளியுடன் கனமழை: 50 ஆயிரம் வாழை, 30 மின் கம்பங்கள் சாய்ந்தன

11 hours ago 3

மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் நேற்று சூறாவளியுடன் கனமழை பெய்தது. இதில், 50 ஆயிரம் வாழைகள், 30 மின் கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தது. நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை அருகே சிறுமுகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான லிங்காபுரம், காந்த வயல், வச்சினம்பாளையம், பாலப்பட்டி, மொக்கை மேடு, உளியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது.

சூறாவளி காற்றுக்கு மேட்டுப்பாளையம்-சத்தி சாலையில் உள்ள ஆலாங்கொம்பு தண்ணீர் தடம், பாரதிநகர், தியேட்டர் மேடு, ரங்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோர மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது. இதேபோல் சிறுமுகை நகர் பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததில் சுமார் 30க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்தும், சேதமடைந்தும் கீழே விழுந்தன. இதனால் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சிறுமுகை சுற்று வட்டார பகுதி கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் சாலையோர பேனர்கள் வீட்டின் மீது வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் டேங்குகள் காற்றில் பறந்து சாலையில் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. சிறுமுகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான லிங்காபுரம், காந்தவயல், மொக்கைமேடு, வச்சினம்பாளையம், பாலப்பட்டி, ரங்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது.

இப்பகுதிகளில் நேந்திரன், கதளி, ரஸ்தாலி, ரோபஸ்டா உள்ளிட்ட பல்வேறு வகை வாழை மரங்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்தன. இதனிடைய நேற்று சூறாவளி காற்றுடன் வீசிய கனமழையின் காரணமாக சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமாகியுள்ளன. இதனால் அரும்பாடுபட்டு பயிரிட்டு வளர்த்து வந்த வாழை மரங்கள் சூறாவளி காற்று காரணமாக குலை தள்ளிய நிலையில் முறிந்து சேதமானது. இதனை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேட்டுப்பாளையம்-சத்தி சாலையில் சூறாவளி காற்றால் விழுந்த சாலையோர மரங்களை ஜேசிபி இயந்திரம் மற்றும் ராட்சத மரம் அறுக்கும் இயந்திரத்தின் உதவியுடன் வெட்டி அகற்றினர். இதேபோல் மின் வாரியத்தினர் சூறாவளி காற்றின் காரணமாக விழுந்த முறிந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து லிங்காபுரம் பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘‘பலத்த சூறைக்காற்றுக்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமாகி உள்ளன.

பல்லாயிரக்கணக்கான மரங்கள் குலை முற்றி அடுத்த வாரம் அல்லது அதற்கு அடுத்த வாரம் வெட்டும் நிலையில் இருந்தன. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உரம் மற்றும் இடுபொருள்கள் விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயம் செய்ய முடியாமல் கடன் பெற்று விவசாயம் செய்து வரும் நிலையில் இதுபோன்ற இயற்கை பேரிடர்களால் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். வருவாய்த்துறையினர் சேத மதிப்பீடுகளை உடனடியாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை வேண்டும்’’ என்றனர்.

The post சிறுமுகையில் சூறாவளியுடன் கனமழை: 50 ஆயிரம் வாழை, 30 மின் கம்பங்கள் சாய்ந்தன appeared first on Dinakaran.

Read Entire Article