
கோவை,
கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகம் 11.50 எக்டேர் பரப்பளவில் உள்ளது. இது ஓடந்துறை, பெத்திக்குட்டை, காவல் சுற்று ஓடந்துறை, குஞ்சப்பனை, உளியூர் கூத்தாமண்டி வடக்கு, கூத்தாமண்டி தெற்கு ஆகிய 6 சுற்றுகளை உள்ளடக்கியது. சிறுமுகை வனப் பகுதியில் காட்டு யானை, காட்டு எருமை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
வனப்பகுதியில் கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியை கருத்தில் கொண்டு வனத்துறை சார்பில் வனப்பகுதியில் 6 தண்ணீர் தொட்டி, 4 கசிவுநீர் குட்டை, 50-க்கும் மேற்பட்ட தடுப்பணை உள்ளன. தற்போது தடுப்பணைகள் அனைத்தும் நீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே கோடை காலத்தில் வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் மேற்பார்வையில் வனத்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வாரத்துக்கு ஒருமுறை தொட்டிகளை சுத்தம் செய்து டேங்கர் லாரிகள் மூலம் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வனப்பகுதியில் உள்ள 3 ஆழ்துளை கிணறுகள் மூலம் தொட்டிக ளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
அதை குடித்து வனவிலங்குகள் தாகம் தணிக்கின்றன. தொட்டிக ளில் தண்ணீர் குறைந்ததும் மீண்டும் நிரப்ப வசதியாக வனத்துறை யினர் கண்காணிபபு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதுபோல் மேட்டுப்பாளையம் வனச்சரகம் மேட்டுப்பாளையம், சுண்டப்பட்டி ஆகிய 2 பிரிவுகளில் கல்லாறு, ஜக்கனாரி, உலிக்கல், கண்டியூர், சுண்டப்பட்டி பிரிவு, நெல்லிமலை ஆகிய 6 சுற்றுக்களை உள்ளடக்கியது. இங்கும் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
வனவிலங்குகளின் தாகம் தணிக்க வனத்துறை சார்பில் வனப்பகுதியில் ஆங்காங்கே உள்ள கசிவுநீர் குட்டைகள், தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தண்ணீர் தொட்டிகள் மற்றும் கசிவு நீர்க்குட்டைகள் தூய்மைப்படுத்தப்பட்டு தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.