
சிறுநீரகத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், சிறுநீரக ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு இன்று (13.3.2025) உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளுடன் சிறுநீரக விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டின் கருப்பொருள் "உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளனவா? பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்கவும்" என்பதாகும்.
உலம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை என்பது வேதனை தரும் தகவல். எனவே, ஆரம்பகால கண்டறிதல் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், மீளமுடியாத பாதிப்புகள் வராமல் தடுக்கும் என்பதை இந்த ஆண்டின் கருப்பொருள் வலியுறுத்துகிறது.
சிறுநீரக நோய்கள் பெரும்பாலும் ஆரம்ப கட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தாது. பெரும்பாலானவர்களுக்கு இரண்டு சிறுநீரகமும் குறிப்பிடத்தக்க அளவில் சேதம் ஏற்படும்வரை, எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை. 90 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு ஏற்படும்போதுதான் அறிகுறி தென்படுகிறது.
குறிப்பாக நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) உள்ளவர்களுக்கு சிறுநீரகம் விரைவில் பாதிக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது. எனவே, அவர்கள் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
இதேபோல் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் சிறுநீரக பரிசோதனை செய்து, பாதிப்பு இருக்கிறதா? என்பதை அறிந்துகொள்வது அவசியம். குடும்பத்தில் வேறு யாருக்காவது சிறுநீரக பாதிப்பு இருந்தால், மற்றவர்களுக்கும் வரக்கூடிய வாய்ப்பு அதிகம். எனவே, அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அறிகுறி தென்படாவிட்டாலும் வழக்கமான பரிசோதனைகளை செய்யும்படி சுகாதார வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். சிறுநீர் பரிசோதனைகள் மற்றும் ரத்த பரிசோதனை போன்ற ஆரம்பகால சோதனைகள், பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு முன்பே அவற்றை அடையாளம் காண உதவும்.
சிறுநீரக பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளையும், உணவு முறைகளையும் கடைப்பிடித்தால் சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம். சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த சுத்திகரிப்பு செய்யவேண்டும். மாற்று சிறுநீரகம் பொருத்தவேண்டிய நிலையும் ஏற்படும்.
அரசாங்கங்கள், சுகாதார நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உலக சிறுநீரக தின விழிப்புணர்வு பிரசாரம் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. சிறுநீரக நோய்கள் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பதால் சரியான விழிப்புணர்வு, பரிசோதனை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம், நோயின் தாக்கத்தை கணிசமாகக் குறைக்க முடியும்.