நன்றி குங்குமம் தோழி
மாலை மங்கத் தொடங்கியது. முழுவதுமாக சூரியன் மறைந்ததும் தன் வயலிலிருந்து வீட்டுக்கு நடையை கட்டினார் பெரியசாமி. பெயருக்கு ஏற்றபடி எல்லாவிதத்திலும் பெரியவர்தான். அந்தக் காலத்து அஞ்சாம் வகுப்பு படித்தவர். அதை எல்லோரிடமும் மெச்சியபடி பேசிக் கொள்வார். அவருடைய மனைவி முத்துப்பேச்சி. இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணம் முடித்துவிட்டார். எழுபது வயதிலும் விவசாய வேலைக்கு சென்று விடுவார். நடந்த கால் நிற்காதில்லையா..? அதனால் தன் ஓட்டம் நிற்கும் வரை விவசாய வேலையை விடப்போவதில்லை என்பதில் விடாப்பிடியாக இருந்தார்.
“ஏங்க… அடுத்த மாசத் திருவிழாவுக்கு பொண்ணுங்க ரெண்டும் வர்றதா சொல்லியிருக்காங்க. உங்களுக்கு சந்தோஷம்தானே” என்றாள் முத்துப்பேச்சி.“அடிப்போடி இவளே… பொண்ணுங்களையும், பேரப் பசங்களையும் பாக்கறது சந்தோஷம்தான். ஆனா, அதுங்க வந்த உடனே மத்த சொந்தக்காரங்களும் இங்க வந்துடறாங்களே… அதுங்களுக்கு ஆடு, ேகாழி அடிச்சிப் போடறது யாரு…? பணத்த நம்மதானே அவுக்கணும்” என்று பொருமினார் பெரியசாமி.
“ஏய் மனுசா இன்னையா இப்படி சொல்லிப்புட்ட… அதுங்களுக்கு நம்ம தான்யா எல்லாம். நாம ஆக்கிப்போடாம வேற யார் ஆக்கிப்போடுவா… சொல்லுயா…” சீறினாள் முத்துப்பேச்சி.
“அடியே ராசாத்தி… பொண்ணுங்கள வுட்டுக் கொடுக்க மாட்டியே… நான் ஆக்கிப் போடறதுக்காக சொல்லலடி… ரெண்டாவது மருமகன்தான் பணம் பணம்னு அலையறாரு. பொண்ணும் அவர் கூட சேர்ந்து ஆடறா… அதனாலதான் அப்படிச் சொன்னேன். இது தப்பா?எப்ப இருந்தாலும் நாமதான் அதுங்களுக்கு பண்ணணும்னு தெரியும். ஆனா, அதுக்கும் ஒரு அளவு வேண்டாம்…” பெரியசாமியின் பேச்சில் விரக்தி தெரிந்தது.“கொக்கரக்கோ… கொக்கரக்கோ” என்று அதிகாலை சூரியனை வரவேற்க தயாரானது சேவல்கள்.
“ஆத்தங்கரை பஸ் ஸ்டாப் வந்துடுச்சி இறங்குங்கோ… ஹேய் ஆத்தா பாத்து இறங்கும்மா…” என்றார் கண்டக்டர். பார்ப்பதற்கு புதுசா வேலைக்கு வந்தவர் மாதிரியே தெரிந்தது.
“கண்டக்டர் அண்ணா எங்க ஊரு வந்துடுச்சின்னு எங்களுக்கு தெரியாதா என்ன? நீங்க வேற சொல்லணுமாக்கும்…” பெரியசாமியின் இரண்டாவது மகள் தனம் மூச்சிரைக்கப் பேசினாள். சின்ன வயதில் பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டு ஓடி ஆடி விளையாடிய இடங்களில் அந்த பஸ் ஸ்டாப்பும் ஒன்று. தன் வயது சிறுமிகளுடன் மாங்காய் பறிப்பது, புளியம் பழம் அடிப்பது என்று தனத்தின் அலப்பறை சொல்லி மாளாது.
தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பார்த்துவிட்டால் அப்பாவிப் பெண் போல முகத்தை வைத்துக்கொண்டு, கண்களில் தண்ணீர் வருவது போல நடிப்பாள். இவளின் நாடகம் அவர்களுக்குத் தெரிந்தாலும் சிறு பிள்ளை என முதுகுக்குப் பின்புறம் லேசாக தட்டி விட்டு விடுவார்கள். இதனால் இப்படி திருடுவதையே தொடர்கதையாக வைத்துக் கொண்டாள்.
ஒருநாள் முனுசாமி அண்ணன் பெரிய சாமியை சந்தையில் பார்த்துவிட்டு யதேச்சையாக தனம் பண்ணிய சேட்டை முழுவதையும் கொட்டிவிட்டார். அவ்வளவுதான் வீட்டுக்கு வந்த பெரியசாமி பேயாட்டம் ஆடிவிட்டார்.
“இந்தா புள்ள தனம். உன்ன பள்ளிக் கூடத்துக்கு அனுப்புனா பயங்கரமா சேட்ட பண்றியாமே… நல்லா படி புள்ள… விளையாட்டெல்லாம் ஓரங்கட்டு. நீயாவது படிச்சி கம்ப்யூட்டர் ேவலைக்குப் போ” என்று மிரட்டல் தொனியில் பேசினார் பெரியசாமி.முகத்தை உம்மென்று வைத்துக் கொண்ட தனம் அன்று இரவு முழுவதும் சாப்பிடாமலே தூங்கிவிட்டாள்.
காலை எழுந்ததும் யாரிடமும் பேசாமல் வேகவேகமாக பள்ளிக்கு கிளம்பினாள். பள்ளி முடிந்து திரும்புகையில் தனத்தை பஸ் ஸ்டாண்டில் பார்த்துவிட்ட பெரியசாமி அவளை தன் அருகே அழைத்தார்.
“ஏய் புள்ள இப்படியே எத்தனை நாளா எங்கிட்ட பேசாம இருப்ப? அவ்வளவு கோபமா உனக்கு…? நீ நல்லா வரணும்னு தான் அப்படிச் சொன்னேன். இப்பயே நீ திருட ஆரம்பிச்சா அதுவே பழக்கமாயிடும் புள்ள… உன் கோபத்தையெல்லாம் தூக்கி வச்சுட்டு என் கூட கடைக்கு வா… உனக்கு புடிச்ச இனிப்ப வாங்கிக்கோ” என்றார் பெரியசாமி.
பெரியசாமி சைக்கிள் மிதித்து கடை வாசலில் போய் நிறுத்தினார். தனக்குப் பிடித்த இனிப்புகளை எல்லாம் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வீட்டுக்குச் சென்றாள் தனம்.
காலங்கள் ஓடியது. பனிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தாள் தனம். மேற்படிப்பு படிக்க அவளுக்குத் தோணவில்லை. அதற்குள் கல்யாணம், குழந்தைகள் என்று அனைத்தும் கடகடவென்று முடிந்துவிட்டது. அக்காவையும், இவளையும் வெவ்வேறு ஊரில் திருமணம் முடித்து வைத்தார்கள். கடைக்குட்டி என்பதால் வீட்டில் தனத்தைதான் ரொம்ப பிடிக்கும்.
“ஆத்தா அய்யா கிட்ட சொல்லி வையுங்க… என் வீட்டுக்காரர் 5 லட்சம் பணம் கேட்டிருக்கிறாரு. நீ என்ன பண்ணுவியோ தெரியாது. அக்கா வர்றதுக்குள்ள எனக்கு பணத்தை எண்ணிவையு… இல்லனா நடக்கிறதே வேற… அப்புறம் குழந்தையும் கையுமாதான் நான் திரும்பி வரணும் பார்த்துக்கோ” என்று பேச்சிலே அதட்டினாள் தனம்.
முத்துப்பேச்சிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரே பதட்டமானாள். எப்ப பார்த்தாலும் சின்ன மாப்ளதான் பணம் கேட்டு தொந்தரவு பண்றார். பெரிய மாப்ள அதப் பத்தியே பேசறது இல்லன்னு அடிக்கடி பெரியசாமி புலம்பியது முத்துப்பேச்சிக்கு காதில் ரீங்காரமிட்டது போல் இருந்தது.வாசலில் ஹாரன் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள் முத்துப்பேச்சி. பெரிய பொண்ணு பாக்கியமும், மருமகனும் இரண்டு சக்கர வண்டியில் வந்திறங்கினர்.“வாங்க மாமா… வாங்க வாங்க” என்று முகத்தில் புன்னகையுடன் வரவேற்றாள் தனம். அதற்குள் பெரியசாமியும் வீடு வந்து சேர்ந்தார்.
முத்துப்பேச்சியின் முகத்தில் புன்னகை இல்லை. வீட்டில் ஏதோ நடந்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டார் பெரியசாமி. ஆனால், அவர் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
“கை காலை அலம்பிட்டு வாங்க மாப்ள… சாப்பிடலாம். எங்கம்மா சின்னவரு” என்று தனத்திடம் கேட்டார் பெரியசாமி. அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள். எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் திண்ணைக்கு மனைவியுடன் சென்றார் பெரியசாமி. கூடவே பெரிய மாப்ளையும் பாக்கியமும் உட்கார்ந்து கொண்டார்கள். தனம் சொன்ன அனைத்தையும் கொட்டிவிட்டாள் முத்துப்பேச்சி. திண்ணைப் பேச்சு காரசாரமாக மாறிவிட்டது.
“இங்க பார் பாக்கியம். நான் இந்த வயசிலயும் வயக்காட்டுக்கு ஓடிக்கிட்டிருக்கேனா… அது உங்களப் பத்தி மட்டும் நான் நினைக்கல… பேரப் பசங்களுக்கும் ஏதாவது நகை, நட்டு செஞ்சிப் போடத் தான். உங்கள கரை சேத்தா மாதிரி அவுங்களையும் கரை சேர்க்கணும்னு நினைக்கிறேன். ஆனா, சின்னப் பொண்ணும் சரி, சின்ன மாப்ளையும் சரி பணத்துலதான் குறியா இருக்காங்க… வயக்காட்டுல நெல்லுதான் காய்க்கும்… பணம் காய்க்காது” என்று பொருமினார் பெரியசாமி.
“இங்கப் பாருங்க மாமா பேசாம அந்த ஏரிக்கரைய வித்துடுங்க. ஆளுக்கு சம பங்கா பிரிச்சு கொடுத்துடுங்க” என்றார் பாக்கியத்தின் கணவர்.“அந்த ஏரிக்கரைய ஒருநாள் விக்கதான் போறேன். ஆனா, இப்ப இல்ல மாப்ள… அது என் உசுரோட கலந்தது. நேரம் வரும் போது நான் முடிவெடுப்பேன். அதுக்குள்ள உங்களுக்கு பணம் வேணும்னா வேற எங்காவது கை மாத்தா வாங்கிக்கோங்க. இங்க நீங்க எப்ப வேணா வந்து போகலாம். என்னால முடிஞ்சத செஞ்சி போடுவேன். பெரியளவுல எதிர்பார்த்து யாரும் வராதீங்க… அது யாரா இருந்தாலும் சரிதான்” என்றார் பெரியசாமி.
ஜன்னலுக்கு பின்புறம் படுத்திருந்த தனம் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.பொழுது விடிந்ததும் யாரிடமும் சொல்லாமல் பாக்கியமும் அவள் கணவரும் சென்றுவிட்டார்கள். தனம் ஒரு மூலையில் படுத்துக் கொண்டிருந்தாள்.ஐந்து வயசில அப்பாவையும் பத்து வயசுல அம்மாவையும் பறி கொடுத்துட்டாரு பெரியசாமி. அப்ப இந்த ஒழுகின ஓட்டு வீடுதான் அவருக்குன்னு சொந்தமா இருந்துச்சி… சொந்தக்காரங்க எல்லோருமே கை கழுவிட்டாங்க.
இவரு கிடைக்கற வேலைய பாத்துக்கிட்டு பள்ளிக்கூடத்துக்கும் போனாரு. ஆனா, படிப்புதான் மண்டையில ஏறவே இல்லை. ஐஞ்சாம் கிளாஸ் மேல படிப்புக்கு முழுக்குப் போட்டுட்டு வயகாட்டு வேலைக்குப் போயிட்டாரு. கிடைக்கிற பணத்துல வயித்துக்குப் போக கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு இந்தக் காடு கரைய விலைக்கு வாங்கினாரு. சின்ன இடமா இருந்தாலும் அதுல வாழை, பயிர் எல்லாம் போட்டு தன் உசிரா பார்த்துக்கிட்டாரு. இப்ப அதுக்கு உலை வெக்கறா மாதிரி சின்னப்பொண்ணு பேசினதால அவர் முழுவதுமே ஒடுஞ்சிப் போயிட்டாரு.
“இங்கப் பாருமா… அய்யாவோட சொத்து எதுவும் எங்களுக்கு வேணாம். உங்க சின்ன மருமகன் முன்னாடி காசெல்லாம் கேட்டது உண்மைதான். ஆனா, அவரு ரொம்ப நல்லவருன்னு உங்களுக்கு தெரியாமப் போயிடிச்சு… இப்ப கூட உங்க பெரிய மருமகன்தான் அதான் என்னோட மாமன்காரன்தான் அப்பாவோட காடு கரைய வித்து காச அமுக்கலாம்னு ரகு மாமா மூலமா தகவல் தெரிஞ்சி என் கிட்ட சொன்னாரு. அதான் அவுங்களுக்கு முன்னாடி நாங்க முந்திக்கிட்டு டிராமா செஞ்சுட்டோம். அந்தக் காடு கரை அப்பாவோட வியர்வையால வாங்கினது.
அது உங்க காலத்துக்குப் பின்னாடியும் நாங்க விக்க விடமாட்டோம். எங்க பசங்க உழைச்சு சம்பாதிச்சுக்கிட்டோம்” என்று மூச்சு விடாமல் பேசித் தீர்த்தாள் தனம்.இவ மனசுக்குள்ள இவ்ளோ நல்ல எண்ணம் இருக்கா? யார் நல்லவங்கன்னு நினைச்சோமோ அவங்க மனசுக்குள்ள இவ்ளோ விஷமம் இருக்கா…? இவ்ளோ நாள் தெரியாம போச்சே… என்ன மன்னிச்சிடு தனம் என்று மகளை உச்சி முகர்ந்தார் பெரியசாமி.
தொகுப்பு: எஸ்.முத்துலட்சுமி
The post சிறுகதை-தந்திரம்! appeared first on Dinakaran.