
லண்டன்,
இந்தியா - இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த சூழலில் இன்று 2-வது நாள் ஆட்டம் ஆரம்பமானது.
இன்றைய நாளின் தொடக்க ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ராவின் முதல் பந்திலேயே பவுண்டரி அடுத்த ஜோ ரூட் தனது 37-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இருப்பினும் இங்கிலாந்து அணி பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பென் ஸ்டோக்ஸ் 44 ரன்களிலும், ஜோ ரூட் 103 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில் விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் மற்றும் பிரைடன் கார்ஸ் கைகோர்த்து இங்கிலாந்து அணியை காப்பாற்றினர்.
முன்னதாக இந்த போட்டியின் முதல் நாளில் (நேற்று) இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நிதானமாக பேட்டிங் செய்தனர். இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை இந்திய வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் அடிக்கடி ஸ்லெட்ஜிங் செய்தார்.
அந்த சமயத்தில் இந்த போட்டியை பார்த்து கொண்டிருந்த இங்கிலாந்து முன்னாள் வீரரான மைக்கேல் அதர்டன், சிராஜ் எப்படிப்பட்ட குணம் உடையவர்? என்று இந்திய முன்னாள் வீரரான ரவி சாஸ்திரியிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, "சிராஜ் ஒரு ஜோக்கர். அவர் யாரையும் கேலி செய்ய மாட்டார். ஆனால் பலரும் அவரை கிண்டல் செய்து சிரிப்பார்கள். பண்டும் சிராஜும் ஒரே மாதிரிதான். அவர்கள் இருவரும் இருந்தால் ஓய்வறை சிரிப்பாக இருக்கும். குறிப்பாக சிராஜுக்கு டிஎஸ்பி பதவி கிடைத்தது. அதை வைத்து பலரும் ஓய்வறையில் சிராஜை கிண்டல் செய்வார்கள். அப்போது சிராஜ், 'எங்களை ஐதராபாத் வந்து பாருங்கள். நான் பார்த்து கொள்கிறேன்' என்று சொல்லி மிரட்டுவார்" என கூறினார்.