
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் இதுவரை 156 படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தற்போது 'விஸ்வம்பரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். 18 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா சிரஞ்சீவியுடன் இணைந்து இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
மீனாட்சி சவுத்ரி மற்றொரு நாயகியாகவும், சுரபி, இஷா சாவ்லா, ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தில் அதிகமான வி.எப்.எக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானது. டீசரில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்துமே வெவ்வேறு ஹாலிவுட் படங்களின் காட்சிகளின் தழுவலில் உருவாக்கி உள்ளதாக டீசர் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், படத்தின் முதல் பாடலான 'ராமா ராமா' வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2006-ல் 'ஸ்டாலின்' என்ற படத்தில் சிரஞ்சீவி- திரிஷா ஜோடி சேர்ந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.