சின்னமனூர்: சின்னமனூரில் பழமை வாய்ந்த மாணிக்கவாசகர் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி ரூ.75 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேனி மாவட்டம், சின்னமனூரில் இருந்து மார்க்கையன்கோட்டைக்கு செல்லும் சாலையில் அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே கடந்த 1018ம் ஆண்டில் கட்டப்பட்ட மாணிக்கவாசகர் கோயில் உள்ளது. வாழ்நாள் முழுவதும் சிவனைப் பற்றியே உணர்ந்து பாடிய பாடல்களால் தெய்வீக புகழ் பெற்றவருக்கு இங்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு உள்ளே சிவபெருமான், பார்வதி, விநாயகர், சனிபகவான், குரு பகவான், ஆஞ்சநேயர் உள்ளிட்ட உபசன்னதிகள் உள்ளன. சிவகாமியம்மன் கோயிலில் உபகோயிலாக திகழ்வதால், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், சிவகாமி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி நடைபெற்றது. இதேபோல, மாணிக்கவாசகர் கோயிலிலும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையேற்று உபயதாரர்கள் உதவியுடன் ரூ.75 லட்சம் மதிப்பில் கடந்த 6 மாதமாக மாணிக்கவாசகர் கோயிலில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. தற்போது 85 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன; 15 சதவீத பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில் புனரமைப்பு பணி தீவிரம்: ரூ.75 லட்சத்தில் நடைபெறுகிறது: விரைவில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.