சின்னமடம்-பூவரசன்குப்பம் இடையே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மலட்டாறு சாலை

2 weeks ago 4

* பல ஆண்டுகளாகியும் சீரமைக்காத அவலம்

* விரைந்து சீரமைக்க பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மலட்டாறு கரையோரம் அமைக்கப்பட்ட தார்சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்காததால் விவசாயிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் அதிக கிராமப்புறங்களை கொண்ட மாவட்டமாக விழுப்புரம் உள்ளது. விவசாயமும் அதனை சார்ந்த கால்நடை தொழிலை நம்பியே விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிராமங்களில் இருந்து விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை நகரப்புறத்துக்கு கொண்டு செல்லவும், மாணவ, மாணவிகள் கல்வி கற்க ஏதுவாகவும் சாலைகள் இன்றியமையாததாக உள்ளன. இதனால் குக்கிராமங்கள் முதல் சாலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்து அது அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இயற்கை பேரிடர் காலங்களில் இந்த சாலைகள் சேதம் அடைவதும், வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளன.

ஆனால் அதன் பிறகு இந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பது விவசாயிகள், பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம் விழுப்புரம் அருகே சின்னமடம்-பூவரசன்குப்பம் இடையே மலட்டாறு கரையோரம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது இந்த தார் சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சாலையோரம் முறையான தடுப்புகள் அமைக்காததால் இந்த சாலைகள் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகின்றன. இந்த சாலை வழியாக பண்ருட்டி மார்க்கத்திலிருந்து கள்ளிப்பட்டு, வடமம்பலம், சின்னமடம் வழியாக பூவரசன்குப்பம் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கும் மற்றும் மேட்டுப்பாளையம் வழியாக மடுகரை உள்ளிட்ட புதுச்சேரி மாநிலங்களுக்கும் செல்ல முடியும்.

அதே போல் எதிர் வழியாக கடலூர், புதுச்சேரி மார்க்கத்தில் இருந்தும் எளிதாக செல்லக்கூடிய பிரதான சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு தற்போது முற்றிலும் சேதமடைந்துள்ளது. தார் சாலை தற்போது ஒற்றையடி பாதையாக மாறியுள்ளது. மேலும் மலட்டாறு கரையோரம் அமைக்கப்பட்ட சாலை ஒற்றையடி பாதையாக மாறியதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளன. மேலும் மழை, வெள்ள காலத்தில் வாகனங்கள் முற்றிலும் செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் ஆய்வு செய்து முறையாக தார் சாலை அமைத்து அதனை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் அடித்து செல்லாத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சின்னமடம்-பூவரசன்குப்பம் இடையே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மலட்டாறு சாலை appeared first on Dinakaran.

Read Entire Article