
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்தைப் போலவே, சின்னத்திரைக்கும் தனியாக நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் தற்போதைய தலைவராக சீனிவாசன் இருக்கிறார். இந்த நிலையில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 18-வது பொதுக்குழு கூட்டம் நேற்று சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தேர்தல் வருகிற ஆகஸ்டு 10-ந் தேதி நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது ஒரு தரப்பினர், கடந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களை இப்போதும் நிறைவேற்ற வேண்டும் என்றும், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரவிவர்மா நீக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி கூச்சலிட்டனர். இதனால் கூட்டத்தில் வாக்குவாதமும், சலசலப்பும் எழுந்தது. இருப்பினும் ஏற்கனவே வாசிக்கப்பட்ட தீர்மானங்களுடன் கூட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.