சின்ன வெங்காயத்துக்கு காப்பீடு அவகாசம் நீட்டிக்க வேண்டும்

3 hours ago 2

பாடாலூர், நவ. 29: சின்ன வெங்காயத்துக்கு காப்பீடு தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பெரம்பலூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர், கீழ் கொளக்காநத்தம், செட்டிகுளம், குரும்பலூர் பிர்காக்களில் அதிகளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்கின்றனர். இந்த பகுதியில் விளையும் வெங்காயத்துக்கு தமிழக அளவில் மவுசு உண்டு. இந்நிலையில் நடப்பாண்டு சின்ன வெங்காய பயிருக்கு காப்பீடு செய்ய நாளை (நவ. 30) கடைசி நாள் என்று பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார். ஏக்கருக்கு பிரீமிய தொகை ரூ.2,060 என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில், சின்ன வெங்காயத்துக்கான காப்பீடு தேதியை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், சின்ன வெங்காயம் சாகுபடிதான் எங்களுக்கு வாழ்வாதாரம். கடந்த மாதம் தீபாவளி பண்டிகை வந்ததால் அதிகம் செலவு ஏற்பட்டுள்ளது. இது தவிர கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை விற்பனை செய்ய முடியவில்லை. மேலும் வெங்காயத்துக்கு போதிய விலையும் கிடைக்கவில்லை. இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறோம். இதையெல்லாம் கருத்தில் கொண்டு சின்ன வெங்காயத்துக்கான பயிர் காப்பீடு தேதியை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

The post சின்ன வெங்காயத்துக்கு காப்பீடு அவகாசம் நீட்டிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article