
இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவர் தனது 234-வது படமான 'தக் லைப்' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கமலின் 237-வது படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ்சகோதரர்கள் இயக்க உள்ளனர். நடிகர் கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான படிப்பை கற்றுக்கொள்ள சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். மேலும் லாஸ் வேகாசில் நடந்த சினிமா தொடர்பான ஒரு கண்காட்சியில் கமல் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோவிலுள்ள பெர்ப்ளெக்ஸிட்டி ஏ.ஐ தலைமையகத்திற்குச் சென்று அதன் தலைமை செயல் அதிகாரியான இந்தியாவைச் சேர்ந்த அரவிந்த் ஶ்ரீனிவாஸை சந்தித்துப் பேசியிருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கமல் ஹாசன், "சினிமாவிலிருந்து சிலிக்கான் வரை. கருவிகள் பரிணமித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அடுத்தடுத்து என்னவென்று நமது தாகம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பெர்ப்ளெக்ஸிட்டி தலைமையகத்திற்கு நான் சென்றது உத்வேகம் அளித்தது. அங்கு அரவிந்த் ஶ்ரீனிவாஸை சந்தித்தேன். அவரின் திறன்மிக்க குழுவினர் எதிர்காலத்தை உருவாக்குகின்றனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இத்தோடு அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
கமல் ஹாசனை சந்திததுக் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பெர்ப்ளெக்ஸிட்டி தலைமை செயல் அதிகாரி அரவிந்த் ஶ்ரீனிவாஸ், "உங்களை பெர்ப்ளெக்ஸிட்டி அலுவலகத்தில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் கற்கவும், திரைப்படத் தயாரிப்பில் முன்னணி தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்காகவும் நீங்கள் காட்டும் ஆர்வம் உத்வேகமளிக்கிறது! தக் லைப் மற்றும் நீங்கள் பணியாற்றும் எதிர்கால திட்டங்களுக்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டிருக்கிறார்.