சினிமா தியேட்டரில் பெண் பலியான வழக்கு நடிகர் அல்லுஅர்ஜுன் திடீர் கைது: மாஜிஸ்திரேட் உத்தரவுபடி சிறையில் அடைப்பு, ஜாமீனில் விடுவித்தது ஐகோர்ட்

4 weeks ago 6

திருமலை: சினிமா தியேட்டரில் பெண் பலியான வழக்கு தொடர்பாக நடிகர் அல்லுஅர்ஜூன் நேற்று கைது செய்யப்பட்டார். நடிகர் அல்லுஅர்ஜூன் நடித்த `புஷ்பா 2’ பான் இந்தியா படம் கடந்த வாரம் 5ம்தேதி அதிகாலை வெளியானது. அன்றைய தினம் பல இடங்களில் உள்ள தியேட்டர்கள் முன் ரசிகர்கள் அலைமோதினர். இதேபோல் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் தில்சுக் நகரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது மனைவி ரேவதி(39), மகன் ஸ்ரீதேஜ்(9), மகள் சன்விகா(7) ஆகியோருடன் ஐதராபாத் ஆர்.டி.சி.எக்ஸ் சாலையில் உள்ள தியேட்டரில் புஷ்பா 2 சினிமா பார்க்கச்சென்றனர்.

அங்கு திடீரென இப்படத்தின் கதாநாயகனான அல்லுஅர்ஜூன் வந்ததால் அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி ரேவதி பலியானார். ஸ்ரீதேஜ் சுயநினைவு இழந்தான்.இதுதொடர்பாக சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து தியேட்டர் உரிமையாளர் மற்றும் நிர்வாகத்தினர் அலட்சியத்திற்காக சந்தியா திரையரங்க உரிமையாளர்களில் ஒருவரான சந்தீப், மேலாளர் நாகராஜ் மற்றும் செக்யூரிட்டி பொறுப்பாளர் விஜயசந்தர் உள்பட 7 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் 11வது குற்றவாளியாக நடிகர் அல்லு அர்ஜூன் பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணிக்கு நடிகர் அல்லுஅர்ஜுனை ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளிஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று போலீசார் கைது செய்து சிக்கட்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். முன்னதாக அல்லு அர்ஜூன் கூலாக காபி குடித்து மனைவிக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி போலீசாரின் காரில் ஏறி சென்றார். அப்போது அவரது வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் அல்லு அர்ஜூன் மீது பி என்எஸ் சட்டப்பிரிவு என்எஸ் 105, 118(1)ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 105 பிரிவு ஜாமீனில் வெளிவர முடியாது. 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். பிஎன்எஸ் 118(1)ன் கீழ் ஓராண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் சிக்கடப்பள்ளி போலீசார் அல்லு அர்ஜூனுக்கு மருத்துவ பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நாம்பள்ளி நீதிமன்றத்திற்கு போலீசார் அல்லு அர்ஜூனை அழைத்து சென்று மாஜிஸ்ரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது நடிகர் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நாம்பள்ளி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். தொடர்ந்து போலீசார் அல்லு அர்ஜூனை சென்சுலகூடா சிறைக்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையில் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் கேட்டும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் அல்லு அர்ஜூன் தரப்பில் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அல்லு அர்ஜூனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதனால் விரைவில் சிறையில் இருந்து அல்லு அர்ஜூன் வெளியே வருகிறார். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* வழக்கை வாபஸ் பெறுகிறேன்: உயிரிழந்த பெண்ணின் கணவர்
சினிமா தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான ரேவதியின் கணவர் பாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நடிகர் அல்லு அர்ஜூனை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதற்காக நான் வேண்டுமானாலும் வழக்கை வாபஸ் பெறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

* வருத்தம் அளிக்கிறது: நடிகை ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் பக்கத்தில், ‘நான் இப்போது பார்ப்பதை என்னால் நம்ப முடியவில்லை. நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானதும், மிகுந்த வருத்தமளிப்பதும் ஆகும். இருப்பினும், எல்லாவற்றுக்கும் ஒரு தனி நபர் குற்றம் சாட்டப்படுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. இந்த நிலை நம்பமுடியாதது மற்றும் இதயத்தை உடைக்கும் வகையில் உள்ளது’ என பதிவு செய்துள்ளார்.

* போலீஸ் அனுமதி கேட்டிருந்தோம்: தியேட்டர் நிர்வாகம்
அல்லு அர்ஜூன் வருகை குறித்து முன்கூட்டியே பாதுகாப்பு கேட்கவில்லை என போலீசார் கூறிய நிலையில், சந்தியா தியேட்டர் நிர்வாகத்தினர் 4ம் தேதி புஷ்பா படத்திற்கு முதல் பிரிமியர் காட்சி இரவு காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதில் அல்லு அர்ஜூன் படக்குழுவினர் வரவுள்ளதால் பாதுகாப்பு வழங்கும்படி 2ம் தேதியே அனுமதி கேட்டதற்கான கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.

The post சினிமா தியேட்டரில் பெண் பலியான வழக்கு நடிகர் அல்லுஅர்ஜுன் திடீர் கைது: மாஜிஸ்திரேட் உத்தரவுபடி சிறையில் அடைப்பு, ஜாமீனில் விடுவித்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Read Entire Article