டெல்லி: பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்காக ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சார்ச் விசாக்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. இந்த விசா மூலம் இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து பஞ்சாபி மாநிலத்தில் உள்ள அட்டாரி – வாகா எல்லை வழியாக வாகனங்கள் மூலம் தங்கள் நாட்டுக்கு பாகிஸ்தானியக் செல்ல தொடங்கியுள்ளனர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே விரிசல் அதிகமாகி உள்ளதால் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு பாதுகாப்புக்கு போடப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டன. இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் எக்ஸ் தள கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
சிந்து நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு நீர் நிறுத்தம்
சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தியது இந்தியா. சிந்து நதி பகிர்வு ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை அடுத்து இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாட்டு தூதர்களுக்கு ஒன்றிய அரசு அழைப்பு
இந்தியாவில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதர்களுக்கும் ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜெய்சங்கர் விவரிக்க உள்ளார். ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சற்று நேரத்தில் தூதர்களுக்கு விவரிக்க உள்ளார். இந்தியாவின் முடிவுக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க உள்ளார். தீவிரவாதத்துக்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தான் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் தெரிவிக்க உள்ளார்.
குடியரசுத் தலைவருடன் அமித் ஷா சந்திப்பு
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜெய்சங்கர் சந்தித்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து குடியரசுத் தலைவரிடம் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்து வருகிறார்.
பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை
பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. இந்தியா உடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்கும் உரிமையை பயன்படுத்தவும் பாகிஸ்தான் முடிவு.
பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் வெளியேற உத்தரவு
அடுத்த 48 மணி நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் வெளியேற உத்தரவு
வாகா எல்லை உடனடியாக மூடப்படும்: பாகிஸ்தான்
இந்தியா உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. வாகா எல்லை வழியாக அனைத்து போக்குவரத்துகளையும் தடை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இந்தியா உடனான வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
இந்தியா உடனான வர்த்தகத்துக்கும் முழுமையாக தடை விதித்துள்ளது பாகிஸ்தான்
நதிநீரை தடுத்தால் கடும் நடவடிக்கை: பாகிஸ்தான்
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா வெளியிட்ட அறிவிப்புக்கு பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்குள் பாயும் நதிநீரை இந்தியா தடுத்தால் அதனை போர் நடவடிக்கையாக கருதி பதில் நடவடிக்கை எடுக்கப்படும்.
The post சிந்து நதிநீர் நிறுத்தம் எதிரொலி.. பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை; இந்தியா உடனான வர்த்தகத்துக்கு தடை விதித்து பாகிஸ்தான் அதிரடி!! appeared first on Dinakaran.