*அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
சித்தூர் : வாக்காளர் பட்டியலில் இறந்த நபர்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட கலெக்டர் சுமித் குமார் தெரிவித்தார்.
சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சுமித்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:
மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் உயிரிழந்த நபர்களின் தகவல்களை சேகரித்து, அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை வெளிப்படைத்தன்மையுடன் தயாரிக்க மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கள அளவில் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சித்தூர் மாவட்டத்தில் என்சிடி 3.0 கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஒருங்கிணைந்து, ஒவ்வொரு தொகுதியிலும் செயலகம் வாரியாக, வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர் பெயரை நீக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும்.
படிவம் 6ன் கீழ் பெறப்பட்ட 3,595 விண்ணப்பங்களில் 2,297 விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது. படிவம் 7ன் கீழ் பெறப்பட்ட 3,034 விண்ணப்பங்களில் 1,889 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டது. படிவம் 8ன் கீழ் பெறப்பட்ட 5,304 விண்ணப்பங்களில் 4,177 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.
அதைத்தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி பிரதிநிதி சுரேந்திரா, உயிரிழந்த மற்றும் பல போலி வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார்.
அதேபோல் பாஜக பிரதிநிதி அட்லூரி ஸ்ரீனிவாசுலு, வாக்குச்சாவடிகளை மாற்றவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கு அடையாளஅட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதேபோல் சிபிஎம் கட்சி பிரதிநிதி கங்கராஜூ, ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு வாக்காளர் பட்டியலில் பெயர்களை மாற்றுவது தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆராயப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சிப் பிரதிநிதிகளிடம் கலெக்டர் சுமித் குமார் தெரிவித்தார்.
இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரதிநிதி உதய் குமார், ஆம் ஆத்மி கட்சி பிரதிநிதி பால சுப்பிரமணியம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பிரதிநிதி பரதேசி, ஜன சேனா கட்சி பிரதிநிதி யஷ்வந்த், பிஎஸ்பி கட்சி பிரதிநிதி பாஸ்கர் மற்றும் தேர்தல் பிரிவு கண்காணிப்பாளர் வாசுதேவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை வாக்காளர் பட்டியலில் உயிரிழந்தவர்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை appeared first on Dinakaran.