வள்ளியூர்,ஏப்.29: வள்ளியூர் முருகன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். முருக கடவுளின் அறுபடைவீடுகளுக்கு இணையான பெருமையுடையது வள்ளியூர் முருகன் குகைக்கோயில் ஆகும். இக்கோயிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் பூஜை நடந்தது. கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து கும்ப புனித நீர் அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பூஜைகளை கணேசன் பட்டர் முன்னின்று நடத்தினார்.
10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவு சுவாமி அம்பாளுடன் மயில், கலைமான், கிடாய், பூதம், கிளி, யானை, அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். மே 5ம் தேதி 9ம் திருவிழாவில் காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் திரளாகப் பங்கேற்கும் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தேரை வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்க்கின்றனர். மறுதினம் மாலை 6 மணிக்கு 10ம் திருவிழாவையொட்டி சுவாமி, அம்பாளுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் மாரியப்பன், அறக்காவலர் குழு தலைவர் மீனா மாடசாமி, திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ஆதிபாண்டி, டவுன் பஞ். உறுப்பினர் மாடசாமி, வாணியர் சமுதாய தலைவர் கணேசன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் சங்கர நாராயணன், நெல்லை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர்குழு உறுப்பினர் சமூகை முரளி, பணகுடி ராமலிங்க சுவாமி கோயில் அறக்காவலர்குழு தலைவர் அசோக்குமார், உறுப்பினர் சங்கர், பழவூர் நாறும்பூநாதர் சுவாமி கோயில் அறக்காவலர்குழு தலைவர் இசக்கியப்பன் மற்றும் பக்தர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
The post சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வள்ளியூர் முருகன் கோயிலில் கொடியேற்றம் appeared first on Dinakaran.