
வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் நாளை (மே 11) சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
மாநாட்டிற்கு புதுச்சேரி வழியாக வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி திண்டிவனம் வழியாக செங்கல்பட்டு சென்று அங்கிருந்து மாமல்லபுரம் செல்ல வேண்டும் என தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களால் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி கலால்துறை இணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், "புதுச்சேரியில் உள்ள சாராயம், கள், பார் உள்ளிட்ட அனைத்து மது விற்பனைக் கூடங்களையும் நாளை (மே 11) மதியம் 1 மணி முதல் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு மாமல்லபுரத்தில் நடைபெற இருப்பதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்ககும் வகையில் இந்த தடுப்பு நவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.