ராமநாதபுரம்: திருஉத்தரகோசமங்கை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் புகழ்பெற்ற மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோயில் சித்திரை திருவிழா கடந்த மே 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து 8 நாட்கள் சுவாமி, அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நந்தி, அன்னம், சிம்மம், கிளி, பூத கணம் உள்ளிட்ட வாகனங்களில் பிரகார வீதி உலா வந்தனர். முக்கிய நிகழ்ச்சியான அம்பாள், சுவாமி திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.
நேற்று மாலையில் நான்கு ரத வீதியில் தேரோட்டம் நடந்தது. முன்னதாக விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார சுவாமிகளில் சப்பர ஊர்வலத்துடன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட தேரில், சிறப்பு அலங்காரத்தில் மங்களேஸ்வரி, மங்களநாதர் உற்சவ மூர்த்திகள் கைலாய இசை வாத்தியங்களுடன் வீதிகளில் வலம் வந்தனர். பக்தர்கள் ஹரஹர, சிவ,சிவ கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் தேரின் வடத்தை பிடித்து இழுத்துச் சென்றனர்.
விவசாயம் செழிக்க வேண்டிய வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள் மீது கத்தரி, வாழைக்காய், பூசணி உள்ளிட்ட காய்கறிகள் வீசப்பட்டன. கடைசியாக தேரடி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.
The post சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை தேரோட்டம் appeared first on Dinakaran.