சித்தத்தை சீராக்கும் சீரிய நாமம்

3 weeks ago 6

இதற்கு முந்தைய நாமமான ஜ்வாலா மாலினி என்கிற திதி நித்யா ரூபத்திலிருந்து ஒரு சைந்நியத்தைச் சுற்றி அக்னிப் பிராகாரத்தை உண்டாக்கி, எப்படி அந்த சைந்நியத்தையே (படையையே) காப்பாற்றுகிறாள் என்று பார்த்தோம். அது ஒரு வகையில் defensiive force என்று பார்த்தோம். வெளியிலிருந்து வரக்கூடிய விஷயங்களை தடுக்கக் கூடியது என்று பார்த்தோம். அதற்கும் முன்னாலுள்ள நாமாக்களில் யந்த்ரம், மந்த்ரம், தந்த்ரம் என்றெல்லாம் பார்த்தோம். சென்ற ஜ்வாலா மாலினி என்கிற நாமமானது அத்யாத்மமாக என்ன செய்கின்றது என்றும் பார்த்தோம். ஒரு அத்யாத்ம சாதகருக்கு அவனுடைய அந்த பஞ்ச கோசங்களிலேயும் எல்லாமே ஞானத்தினால் வியாபிக்கப்பட்டு, அங்கு எல்லாமே ஞானமயமாக இருப்பதனால், வெளியிலிருந்து வரக்கூடிய அஞ்ஞான வாசனை அவனை தாக்க முடியாது. உள்ளே அவனுடைய சொரூபம் பாதுகாக்கப்படும்.

அப்படியொரு ஞானப் பிராகாரத்தையே அம்பாள் அங்கு சிருஷ்டிக்கிறாள் என்று பார்த்தோம். இப்போது இதையெல்லாம் செய்தாயிற்று. அதாவது இந்த defence இருந்தால்கூட, அங்கு அதை எதிர்த்துப் போராடக் கூடிய offence ம் மிகவும் முக்கியம். பாதுகாத்துக் கொண்டோம் என்பது மட்டும் இங்கு வேலையில்லை. அது பாதி வேலைதான். மீதி தாக்குதல் என்னவென்றும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு தாக்குதல் நடக்கிறதெனில் அதை எதிர்த்து இன்னொரு தாக்குதல் நடத்துவதற்கு வேறுவிதமான பலம் தேவை. அதனால்தான் போருக்குச் செல்லும்போது வாளையும் கேடயத்தையும் சேர்த்தே அளிக்கிறார்கள். கேடயம் என்பது defence, வாள் என்பது offence. இரண்டுமே வேண்டும். நீ உன்னை தற்காத்துக் கொள்வதும் வேண்டும். அதே நேரத்தில் உன்னை நோக்கி வரும் தாக்குதலை அழிக்கக் கூடிய சக்தியும் உன்னிடம் இருக்க வேண்டும். இப்போது சென்ற நாமத்தில் ஜ்வாலா மாலின் அக்னிப் பிராகாரத்தை உண்டாக்கி அம்பாள் சைன்னியத்தை பாதுகாக்கிறாள்.

ஆனால், இங்கு தாக்குதல் என்கிற offence எப்படி இருக்கிறதெனில், பண்டாசுரனுடைய சைன்னியம் என்கிற படையும் தாக்கத்தானே செய்யும். இங்கு பண்டாசுரன் என்பதே நம்முடைய ஐந்து புலன்களும் மனமும் போடுகின்ற ஆட்டம்தான். நம்மை குழப்புகின்ற அலை கழிக்கின்ற விஷய வாசனைகளை அவ்வப்போது நாம் நினைவு கொண்டால்தான் இந்த நாமத்திற்குரிய விஷயங்களுக்குள் ஆழமாகச் செல்ல முடியும். இப்போது பண்டாசுரனின் படையை அம்பாள் படையை எப்படி எதிர்கொள்கிறதெனில், பண்ட சைந்ய வதோத்யுக்த சக்தி விக்ரம ஹர்ஷிதா என்று இந்த நாமம் சொல்கிறது. இதற்கு என்ன பொருளெனில், அந்த சக்தி சேனையில் இருக்கின்ற, மாதங்கி, மாதங்கிக்கு இருக்கக்கூடிய அங்க, பிரத்யங்க தேவதைகளான நகுலி போன்ற தேவதைகள். வாராஹி, வாராஹிக்கு இருக்கக் கூடிய லகு வாராஹி, ஸ்வப்ன வாராஹி.

திதி நித்யா தேவிகள், அஸ்வாரூடா, சம்பத்கரி என்று இத்தனையும் இருக்கின்றன. இத்தனை சைன்னியத்திலேயும் ஒவ்வொரு ரூபத்திலும் இருப்பது யாரெனில், சாட்சாத் லலிதா திரிபுரசுந்தரிதான் ஒவ்வொரு ரூபத்திலும் இருக்கிறாள். மகாதிரிபுரசுந்தரி மகாராணியாக யார் இருக்கிறாளோ, அவள்தான் மகா வாராஹியாகி இருக்கிறாள். அவள்தான் மஹா ஷியாமளாவாக இருக்கிறாள். அஸ்வாரூடாவாக இருக்கிறாள். அவள்தான் சம்பத்கரியாக இருக்கிறாள். மேலே சொன்ன எல்லா தேவதைகளாகவும் அவள்தான் இருக்கிறாள். இப்படி எல்லா ரூபத்திலும் அம்பாள் வியாபித்திருந்து தன்னையே சைன்னியமாக வெளிப்படுத்திக் கொண்டு, அந்த சைன்னியத்தின் மூலம் பண்டனுடைய சைன்னியத்தை அம்பாள் வதம் செய்கிறாள். அப்படி பண்ட சைன்னியம் வதம் செய்வதைப் பார்த்து அம்பாள் சந்தோஷிக்கிறாள். சக்தி விக்ரம ஹர்ஷிதா – விக்ரமம் என்றாள் பராக்கிரமம் என்று பொருள். ஷரிஷிதா என்றால் சந்தோஷப்படுபவள். அப்போது, இந்த சைன்னியத்தினுடைய பராக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப் படுகிறாள்.

யார் சந்தோஷப்படுகிறாளெனில் லலிதா மகாதிரிபுரசுந்தரி. சக்ர ராஜ ரதத்தில் அமர்ந்து கொண்டு, இந்த சைன்னியங்கள் செய்யக்கூடிய விஷயங்களைப் பார்த்து அம்பாள் சந்தோஷப்படுகிறாள். சரி, இந்த சைன்னியங்கள் யாரை துவம்சம் செய்கிறது? பண்ட சைன்னியங்களை துவம்சம் செய்கிறது. பண்ட சைன்னியங்கள் வந்தால் இந்த சக்தி சைன்னியங்கள் வந்து துவம்சம் செய்கின்றது. அப்படி துவம்சம் பண்ணும்போது அம்பிகை சந்தோஷப்படுகிறாள். இந்த விஷயம் நமக்கு அந்தர்முகமாக என்ன காண்பித்துக் கொடுக்கின்றது? பண்ட சைன்னியம் எது? சக்தி சைன்னியம் எது? பண்ட சைன்னியம் எது? சக்தி சைன்னியம் எது? பண்ட சைன்னியத்திற்கு தலைவன் யார்? சக்தி சைன்னியத்திற்கு தலைமை யார்? பண்ட சைன்னியத்திற்கும் சக்தி சைன்னியத்திற்கும் இருக்கக் கூடிய வித்தியாசம் என்ன? இதையெல்லாம் தெரிந்து கொண்டால் நமக்குள் இது எந்தவிதமான மாற்றங்களை அல்லது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது புரிந்துவிடும். பண்ட சைன்னியமும் பெரிய சைன்னியமாக இருக்கிறது. மாபெரும் படையோடு வருகின்றான்.

அம்பாளுடையதும் மாபெரும் படைதான். பண்ட சைன்னியத்திற்கு பண்டாசுரனே தலைமை வகிக்கிறான். சக்தி சைன்னியத்தின் தலைமை இடத்தில் மகாதிரிபுரசுந்தரி இருக்கிறாள். சக்தி சைன்னியமானது பண்ட சைன்னியத்தை வதம் செய்கிறது. பண்ட சைன்னிய வதோத்யுக்த…. என்பதன் பொருள் இதுதான். எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லாமல், அம்பாளுடைய சக்தி சைன்னியமானது பண்ட சைன்னியத்தை வதம் செய்கின்றது. எப்படி இவ்வளவு சைன்னியத்தை பண்டன் வைத்திருந்தும், சக்தி சைன்னியத்தை எதுவுமே செய்ய முடியவில்லை. இங்கு பண்டாசுரன் யாரெனில், மன்மதன் எரிந்ததற்குபிறகு அந்த சாம்பலில் இருந்து உண்டானவனே ஆவான். காமன் எரிந்து அதிலிருந்து உருவான ஒரு இருள் ரூபம். அதுவும் காமனை சிவபெருமான் தன்னுடைய கோபத்தால் எரிக்கிறார். அவனுடைய உற்பத்தி நடக்கும்போதே எப்படி நடக்கின்றது என்று பார்க்க வேண்டும். காமனை எரிக்கிறார். இவன் உற்பத்தி நடக்கும்போதே அங்கு காமம், குரோதம் என்கிற இணைப்பில்தான் உற்பத்தி ஆகிறான். அவன் உண்டாகும்போதே காமத்தினாலேயும் குரோதத்தினாலேயும்தான் உண்டாகிறான்.

இப்போது இந்த காமம் குரோதம் இந்த இரண்டு விஷயத்தைத்தான் சாஸ்திரத்தில் ராகம், த்வேஷம் என்று சொல்லுவோம். விருப்பு வெறுப்பு என்று சொல்வோம். இந்த விருப்பு வெறுப்புகளிலிருந்து உண்டானவன்தான் பண்டன். நம்முடைய அஞ்ஞானம்தான் பண்டாசுரன். ஏனெனில், விருப்பு வெறுப்பு எதனால் வரும். அஞ்ஞானத்தால் வரும். இந்த பண்டாசுரன் எங்கிருந்து உண்டாகிறான். விருப்பு வெறுப்பிலிருந்து உண்டாகிறான். நமக்கு அஞ்ஞானத்தினால் விருப்பு வெறுப்பு வரும். விருப்பு வெறுப்பு வருவதால் நமக்கு அஞ்ஞானம் விருத்தியாகின்றது. இதை ஆழமாக யோசித்து புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், ஒன்றிலிருந்து பலவாக வளர்ந்தபடி இருக்கும். ஒன்றுக்கொன்று பிடித்துக் கொண்டு வளர்ந்தபடி இருக்கும். எண்ணிக்கையில் அடங்காது. நமக்கு எதுவெல்லாம் பிடிக்குமோ அதே அளவிற்கு பிடிக்காததும் இருப்பதை நாம் பார்க்கலாம். ஒருவரை பிடிக்கிறது என்று சொல்லும்போதே அவரை பிடிக்காமலும் இருப்பதற்கு அங்கே பல காரணங்கள் இருக்கும்.

விருப்பு என்று சொன்னால் எத்தனையோ விருப்புகளை உண்டாக்கும். எத்தனையோ ஆசைகளை உண்டாக்கும். வெறுப்பு என்று சொன்னால், எத்தனையோ வெறுப்புகளை உண்டாக்கும். இதிலிருந்து காம, லோப, குரோத, மத, மாச்சரியங்கள் எல்லாம் வளருகின்றன. இந்த அஞ்ஞானத்தினுடைய மொத்த ரூபம்தான் பண்டாசுரன். மேலே சொன்னவை எல்லாமே பண்டாசுரன் உண்டாக்குகின்ற விருத்திகள். இந்த விருத்திகள்தான் வெளிப்பட்டு வெளிப்பட்டு பல சைன்னியமாக வந்து நிற்கின்றன. இப்போது பண்டாசுரனுடைய படைகள் எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பது புரிகின்றதா? அங்கு பெரிய பன்மைத் தன்மை இருக்கின்றது. அதாவது ஆங்கிலத்தில் சொன்னால் plurality இருக்கிறது. எல்லாவற்றிலேயும் fragmentation இருக்கிறது. எல்லாவற்றிலும் limitation. இது தனி. அது தனி… என்று எல்லாவற்றிலேயும் தனித்தனியாக separation வந்துவிடும். இந்த ஒட்டுமொத்த தனித் தனி விஷயங்களே பெரிய சைன்னியமாக திரண்டு நிற்கின்றது. இப்போது இந்தப் படையின் மையத்தில் பண்டாசுரன் நடுவில் இருக்கிறான். அவன் பெயரே அஞ்ஞானம்.

அவனுக்கு இரண்டு பக்கமும் காம குரோதம். ராக துவேஷம் இருக்கின்றன. இதை அப்படியே நம்முடைய மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். எதிரே பார்த்தால், தலைமைப் பீடத்தில் அம்பிகையினுடைய சைன்னியத்தின் மத்தியில் மகாதிரிபுரசுந்தரி இருக்கிறாள். மகாதிரிபுரசுந்தரி இங்கு யாரெனில் சுத்தமான ஞான சொரூபம். ஆத்ம ஞானத்தின் சொரூபம். அப்படியே பண்டாசுரனின் எதிரே ஆத்ம ஞான சொரூபமாக இருக்கிறாள். தயவு செய்து இந்த விளக்கங்களை உங்களின் மனக்கண் முன்பு கொண்டு வந்து தியானியுங்கள். நமக்குள் அஞ்ஞானம் இருக்கிறதெனில், மிக நிச்சயமாக அதை அழிப்பதற்காக ஞான சொரூபமாக அம்பாள் எதிரே இருக்கிறாள் என்கிறபோது வேறென்ன நமக்கு வேண்டும். இங்கு அம்பிகைக்கு இரண்டு பக்கமும் யார் இருக்கிறாள் எனில், மகா வாராஹியும் ராஜ மாதங்கியும் இருக்கிறார்கள்.

இப்போது அங்கு இருக்கக் கூடிய அந்த விருப்பு வெறுப்பு அஞ்ஞானத்தினால் உண்டான விருப்பு வெறுப்பு plurality என்கிற பன்மைத் தன்மையினால் உண்டாக்கப்பட்டது. ஆனால், சுத்தமான ஆத்ம ஞான சொரூபமான லலிதாம்பாளுக்கு அருகே என்ன இருக்கிறதெனில், மகா வாராஹியும், ராஜ ஷியாமளாவும் ஆகும். இதற்கு முன்பே நாம் பார்த்திருக்கிறோம். அதாவது மனோ ரூபேஷு கோதண்டா… என்கிற நாமத்தின்படி கரும்பு வில்லிலிருந்தும், பஞ்ச பாணங்களிலிருந்தும்தான் மஹா வாராஹியும், மாதங்கியும் உருவாகியிருக்கிறார்கள் என்று பார்த்தோம். பாசம், அங்குசத்திலிருந்துதான் அஸ்வாரூடாவும் சம்பத்கரியும் உண்டாகியிருக்கிறார்கள் என்று பார்த்தோம். இங்கு மீண்டும் மீண்டும் இந்த அம்பிகையின் பெயரை நினைவு கூர்தலே மந்திரமாகும். இதுவே நம் மனதை சுத்தமாக்கும்.
(சுழலும்)

ரம்யா வாசுதேவன்  மற்றும் கிருஷ்ணா

The post சித்தத்தை சீராக்கும் சீரிய நாமம் appeared first on Dinakaran.

Read Entire Article