சிதம்பரம் பகுதியில் நடந்து வரும் புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

3 months ago 23

சிதம்பரம்: போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அமைக்கப்படும் புறவழி சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும், என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோயில், தில்லை காளியம்மன் கோயில் உள்ளது. மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகம், மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளிட்டவைகளும் உள்ளன. நாள்தோறும் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் அதிக அளவில் சிதம்பரம் நகருக்கு வருகின்றனர். மேலும் நடராஜர் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளும், சிவ பக்தர்களும், கார், வேன் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

இதனால் கீழவீதி, வடக்கு வீதி, மேல வீதி, தெற்கு வீதி, பேருந்து நிலையம் செல்லும் பகுதி, படித்துறை இறக்கம், எஸ்பி கோயில் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. குறிப்பாக காலை நேரங்களில், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலக பணிக்கு செல்பவர்கள் வாகனங்களில் செல்லும்போது மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். நடராஜர் கோயில் முக்கிய விழாக்களான ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட விழாக்களின்போது, நான்கு வீதிகளிலும் தேர் வீதி உலா வரும்போது, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

அதேபோல் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள், அவசர தேவைகளுக்கு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால், நகர் பகுதிக்குள் சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி கால நேரம் கடந்த பிறகு தான், மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சிதம்பரத்தையொட்டி வண்டிகேட்டில் இருந்து பழைய பேருந்து நிலையம், கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அண்ணாமலை பல்கலை செல்லும் வகையில், ரூ.34.76 கோடியில் வெளிவட்ட சாலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் தில்லையம்மன் ஓடை மற்றும் கான்சாகிப் வாய்க்காலை பலப்படுத்தி, 2.40 கி.மீ தூரத்திற்கு புதிய சாலைக்கான பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் தில்லையம்மன் ஓடையில் கரையை பலப்படுத்தும் பணிகள், இயந்திரங்கள் கொண்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் தில்லையம்மன் ஓடையில் இருந்து பழைய பேருந்து நிலைய சாலை பணி முடிந்து போக்குவரத்து துவக்கப்பட்டால், நகர் பகுதிக்கு பேருந்துகள் செல்லாமல் இந்த புறவழிச்சாலை வழியாக பேருந்து சொல்லும்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படாது. அதேபோல் கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் செல்லும்போது, நகர பகுதிக்கு செல்லாமல், வெளிவட்ட சாலை வழியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று விடலாம். எனவே புறவழிச்சாலை அமைக்கும் பணியை மழை காலம் துவங்குவதற்குள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post சிதம்பரம் பகுதியில் நடந்து வரும் புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article