சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா விழா தேரோட்டம் கோலாகலம்

3 weeks ago 5

சிதம்பரம்,

மார்கழி மாதம் நடக்கும் முக்கியமான உற்சவங்களில் ஒன்று ஆருத்ரா தரிசனம். சிவபெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே விசேஷமான அபிஷேகங்கள் செய்யப்படும். அதில் ஒன்றுதான் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று நடைபெறக்கூடிய ஆருத்ரா தரிசன திருவிழாவாகும்.

எல்லா சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடந்தாலும் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திர நாளில், பவுர்ணமி அன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாதிரை நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் மார்கழிபவுர்ணமி திதி தோன்றும். 10 நாட்கள் உற்சவமாக கொண்டாடப்படும் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றத்துடன் சிதம்பரத்தில் கடந்த 4-ம் தேதி துவங்கியது.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன தேரோட்ட விழா மிக விமர்சையாக இன்று தொடங்கியது. ஜோடிக்கப்பட்ட ஐந்து தேர்களில் விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி தாயார், சண்டிகேஸ்வரர், சுவாமிகள் நான்கு மாட வீதிகளான தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதியில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

மூலவரும் உற்சவருமான நடராஜர், சிவகாமசுந்தரி தாயார், கருவறையை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது உலகத்தில் சிதம்பரத்தில் மட்டுமே நடைபெறக்கூடிய முக்கிய விழாவாக பார்க்கப்படுகிறது.

தேரோட்டம் முடிந்த பிறகு நடராஜரும், சிவகாமி அம்மையும் ராஜ சபைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுவார்கள். இதை அடுத்து நளை (13-ம் தேதி) ஆருத்ரா தரிசனம் விழாவன்று அதிகாலையிலேயே மூன்று மணி முதல் 6 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று காலை 10 மணி அளவில் திருவாபரணம் அலங்காரத்தில் நடராஜர் காட்சியளிப்பார்.

சிவபெருமான் வெவ்வேறு ரூபங்களில் வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தாலும் நடராஜராக தனித்து அருள்பாலிக்கக்கூடிய இடங்களில் சிதம்பரமும், உத்திரகோசமங்கையும் அடங்கும். தமிழ்நாட்டில், சிவபெருமானுக்கு விசேஷமான பஞ்சபூத ஸ்தலங்களில், சிதம்பரம் உட்பட, ஆருத்ரா தரிசனம் திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்த தேரோட்ட விழாவில் பல்லாரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். பாதுகாப்பு பணிக்காக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஊர்க்காவல் படையினர் உட்பட 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read Entire Article