சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆக்கிரமிப்புகளை ஆய்வுசெய்ய, வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 21-ம் தேதி திருவான்மியூரில் நடைபெற உள்ள திருமண விழாவில் பங்கேற்கும் 31 மணமக்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று பட்டு வேட்டி, சட்டை, துண்டு மற்றும் பட்டுப் புடவைகளை வழங்கினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: நடப்பு நிதியாண்டுக்கான அறநிலையத் துறை மானியக்கோரிக்கையில், “பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி, திருமணம் நடத்தி வைக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.